Tuesday, July 21, 2026
Latest:
All

தொடரும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன?

-நௌஷாத் முகைதீன் –

இன்றைய அரசாங்கம் தன்னை தெரிவு செய்த மக்களைத் திருப்திப் படுத்தும் வகையில் என்ன செய்துள்ளது? அல்லது என்ன செய்து விட்டது? அல்லது என்னதான் செய்து கொண்டிருக்கின்றது? என்பதெல்லாம் விவாதத்துக்கு உட்பட்ட விடயங்கள். அந்த விவாதத்துக்குள் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை.

ஆனால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த, கடந்த அரசாங்க காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் பாரிய குற்றச் செயல்கள், மோசடிகள் என்பன கிளறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தராதரங்கள் எதுவும் இன்றி முன்னாள் அதிகார வர்க்கம், தொழில் நேர்மையைத் துறந்து அவர்களுக்கு துணை நின்ற உயர் அதிகாரிகள் என பலர் இப்போது விசாணையாளர்களின் வலைக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

இவ்வாறு விசாரணை வலைக்குள் சிக்கிய முன்னாள் பிரபலங்கள் சிலர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். ஒரு மரணம் இடம் பெற்று அதற்கான காரணத்தை விசாணையாளர்கள் தெளிவாகக் கண்டு பிடித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே, அதே விதமாக இன்னொரு மர்ம மரணம் இடம்பெறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த மரணங்களில் ஒரு பொதுவான இயல்பு காணப்பட்டது. அதைப் பற்றி தான் நான் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன்.

இந்த மரணங்களில் நான் அவதானித்த பொதுவான இயல்பு எதுவெனில், இவ்வாறு மரணம் அடைந்தவர்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, முன்னாள் ஆட்சியாளர்கள் பற்றி அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி விசாரணையாளர்களுக்கு தேவைப்படும் சில அடிப்படையான தகவல்களை வழங்கி உள்ளனர். அவை இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்ட அல்லது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட ஒன்றில் குற்றச் செயல்களோடு அல்லது மோசடிகளோடு, முன்னாள் ஆளும் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றியதாக உள்ளன.

விசாரணையாளர்கள் பிரயோகித்த அழுத்தம் காரணமாகவும், பலவந்தம் காரணமாகவும் நான் சிலரின் பெயர்கைளைக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.

எது எப்படியோ முன்னாள் ஆளும் வர்க்கத்தின் பெயர்களை விசாரணைகளின் போது குறிப்பிட்ட சிலர் மரணம் அடைந்துள்ளனர். அதுவும் மர்மமான முறையில். இந்த வரிசையில் கடைசியாக மரணம் அடைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் கூட உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் சம்பந்தமாக விசாரணையில் இருந்தவர். இந்த ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது முன்னாள் அதிகார பீடத்தின் முக்கியஸ்தரின் திருநாமத்தை உச்சரித்தவர். விரைவில் மேலதிக விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்படலாம் என்ற நிலையில் தான் மரணம் சம்பவித்துள்ளது.

இப்போது இந்த மரணத்துக்கு சிலரால் கூறப்படும் காரணம் வியக்க வைக்கின்றது. அவர் கடைசி தருணத்தில் தனது மெய்ப் பாதுகாவல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்ட கைத்துப்பாக்கி தவறாக வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் ஒரு கைத்துப்பாக்கியை கூட சரியாகக் கையாளத் தெரியாத ஒருவர் தானா ஒரு காலத்தில் நமது பொலிஸ் மா அதிபராக இருந்துள்ளார்???

இந்த மரணங்களில் அவதானிக்கப்பட்ட பொதுவான இயல்புகளின் போது எனது சிந்தனையில் வந்த ஒரு விடயம் சில சமய மற்றும் சமூகப் பிரிவுகள் பற்றியது. ஆங்கிலத்தில் இத்தகைய பிரிவுகளை CULT என்று குறிப்பிடுவார்கள்.

பொதுவாக, பாரம்பரியம் அற்ற அல்லது வழமைக்கு மாறான அல்லது மிகவும் தீவிரமான விசுவாசங்களைக் கொண்டவர்களையும், அத்தகைய விசுவாசங்களைப் பின்பற்றுகின்றவர்களையும், உள்ளடக்கிய சமூகக் குழுக்கள் தான் ‘கல்ட்’ என்று குறிப்பிடப் படுகின்றன. இந்த சமூகக் குழுக்கள் பற்றி பழைய நினைவுகள் மலரத் தொடங்கியதும் தேடலும் கொஞ்சம் நீண்டது.

உலகில் இதுவரை பல வகையான ‘கல்ட்’ கள் இனம் காணப்பட்டுள்ளன. தீவிர மதபோதனை பிரிவுகள், ஒரு குறிப்பிட்ட மூட நம்பிக்கையை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லும் பிரிவுகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரிவுகள், ஒரு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு முறைகளுக்கு எதிராகப் போராடுதல் என இந்த வகைப்படுத்தல் நீழுகின்றது.

1950 களின் நடுப்பகுதி முதல்1970 களின் நடுப்பகுதி வரை அமெரிக்காவில் மாநில மட்டங்களில் செயற்பட்ட ‘பீபள்ஸ் டெம்பிள்‘ கல்ட் மிகவும் பிரபலமானது. 918 உறிப்பினர்களின் ஒட்டுமொத்த தற்கொலைகளோடு இதன் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கத் தொடங்கியதும் எல்லோரும் ஒட்டு மொத்தமாக புரட்சிகரமான விதத்தில் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று ‘பீபள்ஸ் டெம்பிள்‘ தலைவர் ஜிம்ஜோன்ஸ் விடுத்த உத்தரவை ஏற்று 918 பேர் தமது உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.

இதுபோல் இன்னும் பல ‘கல்ட்’ களும் இருந்துள்ளன. காலப்போக்கில் அவற்றின் இருப்புக்களும் ஏதோ ஒரு வகையில் முடிடைந்துள்ளன.

சில சர்வதேசஅவதானிப்பாளர்கள் நமது நாட்டில் கழுத்தில் சயனைட் குப்பிகளோடு போராடிய விடுதலை புலிகளையும் ஒரு கல்ட் வகைக்குள் தான் கொண்டு வருகின்றனர். தம்மை பற்றியோ அல்லது தமது தலைமை பீடம் பற்றியோ அதிகார வர்க்கம் எதையும் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் போராடியதால் இந்த வகைப்படுத்தலுக்குள்ளும் அவர்கள் கொண்டு வரப்படுகின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரிவுகளும் உள்ளன. அதில் பிரதானமானது ஜப்பானில் ஷோகோ அஷாரா என்பவர் தலைமையில் செயல்பட்ட “ஓம் ஷின்ரிக்யோ” என்ற பிரிவு. 1987 முதல் 1990 களின் பிற்பகுதி வரை செயற்பட்டது. இவர்கள் தான் 1995ல் டோக்கியோ சுரங்க வழி பாதையில் செரின் எனப்படும் நச்சு வாயுவை பாவித்து பலரை கொன்றவர்கள். மேலும் பலரை காயப்படுத்தியவர்கள்.

இந்த குற்றவியல் பிரிவில் மிகவும் மோசமான காரியங்களில் ஈடுபட்ட இன்னும் பல பிரிவுகள் உள்ளன. இந்தப் பதிவை முடியுமானவரைக்கும் சுறுக்கிக் கொள்ள வேண்டும் என்பதால் அதன் விவரங்களை தவிர்த்துக் கொள்கிறேன்.

இந்த குற்றவியல் பிரிவுகளில் அல்லது கல்ட் களில் உள்ளவர்கள் ஒரு விடயத்தை தீவிரமாக நம்புவார்கள். அந்த தீவிர விசுவாசத்துக்குரிய விடயத்தை தங்களது சிந்தனைகளில் விதைப்பவர்ளை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு வழிபடுவார்கள். அந்தத் தலைவனை புனிதமான ஒருவனாக நினைப்பார்கள். அவர் எது செய்தாலும் அதில் சரி காண்பார்கள். எந்தக் காரணம் கொண்டும் அந்த தலைவனை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். தன்னால் தனது தலைவனுக்கு தீங்கு ஏற்பட ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். அதை விட தான் உயிரை மாய்த்துக் கொள்வதையே அவர்கள் விரும்புவார்கள். மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தலைவனை காட்டிக் கொடுப்பதை விட தான் மரணிப்பது மேல் என்று நினைப்பார்கள்.

இனி என்னுடைய முக்கியமான கேள்வி இலங்கையிலும் இது வரை நமக்கு தெரியாத விதத்தில் இப்படியான ஒரு ‘கல்ட்’ செயற்படுகின்றதா? இந்தக் கேள்வி எனக்குள் எழக் காரணம். 1) நான் மேலே குறிப்பிட்டுள்ள ஜப்பானின் குற்றவியல் கல்ட் பற்றி நான் நிறைய வாசித்துள்ளேன். அது நான் ஊடகத்துறையில் பிரவேசித்து தினபதி பத்திரிகையில் வெளிநாட்டு செய்திப் பக்கத் தயாரிப்பில் பணியாற்றிய காலம்.

2) CULT என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான ஒரு சிங்கள மொழி சொல்லை முன்னாள் அரச குடும்பத்தின் பரம்பரை பெயரோடு சேர்த்து அவர்களோடு தொடர்புடையதாக பெரும்பாலும் நம்பப்படும் சர்ச்சைக்குரிய தேரர்கள் இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தி உள்ளனர். அதில் ஒருவர் இப்போது உள்ளே இருக்கின்றார். மற்றவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். அண்மையில் தான் இந்தப் பிரிவில் இருந்து விலகி விட்டதாக பகிரங்கமாக அறிவித்தவர்.

அவர்கள் பாவித்தது அவர்களது சமய ரீதியாக மடாலயங்களை குறிப்பிடும் சொல். இருந்தாலும் ‘கல்ட்’ என்ற சொல்லின் கருப் பொருளோடு ஒத்துப்போகக் கூடியது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

அப்படி ஒரு ‘கல்ட்’ மறைமுகமாக செயற்படுகின்றதா?? விசாரணை அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் முன்னாள் பிரபலங்கள், இந்த மறைமுக ‘கல்ட்’ டின் உறுப்பினர்களா?? மாட்டிக் கொண்டதும் பிணையில் வெளி வருவதற்காக ஓரளவு உண்மைகளை கக்கிவிட்டு, மேலதிக விசாரணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கின்றனரா?? அல்லது ?

விசாணைகளில் இருக்கும் ஏனைய நபர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது?

Ralihan Sathath

Ralihan Sathath is an accomplished academic, veteran educator, and curriculum specialist with over two decades of experience in Tamil language, literature, and educational content development. He currently serves as a Resource Person for Tamil & Literature at the Zonal Education Office in Kinniya. With a strong academic foundation including a B.A., an M.Ed., a PGDE, and an M.Phil (Thesis Submitted) in Tamil from the South Eastern University of Sri Lanka, Mr. Sathath has spent over twenty years shaping the educational landscape. He has been a key contributor to national education, compiling textbooks, study modules, and Teacher Instructional Manuals (TIM) for the National Institute of Education (NIE) and the Educational Publications Department. An accomplished author, he has published prominent educational works, including ‘Thirukural Vina Vidai’ and ‘Salavaikal’. At KVC Media, Mr. Sathath brings his deep linguistic expertise, technical insight into e-learning, and passion for Tamil literature to deliver impactful, thought-provoking commentary and educational insights for our readers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *