Breaking NewsLatestSri Lanka

பேராதனை பேராசிரியர் திலகரத்னவுக்கு வாழ்நாள் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் டபிள்யூ. எம். திலகரத்ன (Prof. W. M. Thilakaratne), இனிவரும் காலங்களில் இலங்கையில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களிலும் எவ்விதமான சம்பளம் பெறும் அல்லது கௌரவப் பதவிகளை வகிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (மே 08, 2026) உத்தரவிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகள் தொடர்பான பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல் மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டபிள்யூ.ஏ.எம். உதாரி எல். அபேசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை (SC/FR 81/2021) விசாரித்த நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்:

• இணையவழி பின்தொடர்தல் (Cyber Stalking)

• அடிக்கடி கட்டிப்பிடித்தல் மற்றும் ஆட்சேபனையையும் மீறி தொடுதல்

• கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துதல்

• பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் கொள்கைகளை மீறுதல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC) உத்தரவு

குறித்த பேராசிரியருக்கு எவ்வித நியமனங்களையும் வழங்க வேண்டாம் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) உச்ச நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. அத்துடன், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை பல்கலைக்கழக சமூகத்தினரிடையே வலுப்படுத்துமாறும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.