குச்சவெளி

சமகாலக் கல்விச் சமூகவியலும் கற்றலுக்கான வாய்ப்புகளும்- 4.0

நூலாய்வு: கிண்ணியா ஆர்.சதாத்

05 .03. 2024 இல், மாலை 7.00 மணிக்கு தாருல் இமான் மண்டபத்தில் ‘READ MORE PUBLICAION நிறுவனத்தினால் ‘சமகால கல்வி சமூகவியலும் கற்றலுக்கான வாய்ப்புகளும் – 4.0’ நவீன சமகால கல்விச் சிந்தனைகள் கொண்ட கல்வியியல் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.

இலங்கை திறந்தபல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜெ.டி. கரீம்தீன் அவர்களினால் எழுதப்பட்ட இந் நூலானது நவீன கால கல்விச் செல்நெறியில் செயற்கை நுண்ணறிவின்(AI) தாக்கம் அதன் போக்கு தொடர்பாக சமூகவியலோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நூலானது கல்விச் சமூகத்துக்கு வழங்கப்படும் ஒர் அருட்கொடை எனலாம். 20 தலைப்புகளுடன் 200 பக்கங்களை கொண்டதாக இந் நூல் அமைய பெற்றுள்ளது. இந்நூல் சமூகத்தையும் கல்வியையும் அதன் போக்கையும் மிகக் காத்திரமாக நவீன பார்வையில் ஆய்வு செய்வதாக அமையபெற்றுள்ளது. உதாரணமாக செயற்கை நுண்ணறிவும் (Artificial intelligence ) பாடசாலைக் கல்வியும், வாழ்நாள் கல்வியில் தொழிநுட்பத்தின் பங்கு, சமூகவியல் கல்வியும் சமூக மாற்றமும், கல்வியும் நவீனமயமாக்கலும் என நவீன சிந்தனைகளை தூண்டக்கூடிய அறிவியல் கட்டுரைகளை இந்நூல் சுமந்து வருகின்றது. தனது கலாநிதி படிப்பை மலேசியாவில் மேற்கொண்டு தன் ஆய்வின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவையும் அனுபவங்களையும் சமூகத்திற்கான பங்களிப்பினை நல்கும் வகையில், இந்நூலை கல்வி உலகிற்கு வழங்கியிருப்பது மெச்சத்தக்கது.

சமூகச் செயற்பாடுகளில் சமூக உறவு முறைகளையும், சமூகத்திற்கும் கல்விக்கும் இடையிலான தொடர்புகளையும் ஆராய்வதாக சில கட்டுரைகள் அமையபெற்றுள்ளமையும் இந்நூலின் சிறப்பம்சமாகும்.

செயற்கை நுண்ணறிவு என்பது இன்று பல்வேறு துறைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இது கல்வியின்பால் சாய்ந்திருப்பது வரமா? சாபமா? என்ற விவாதப் பொருளாகவும் சமகாலத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கல்விக்கு இது எந்தளவுக்கு வரமாக அமைக்கலாம் என்ற வினாவுக்கு விடை பகர்வதாகவும் இவரது கட்டுரைகள் அமையப் பெற்றுள்ளன.

தொழில்நுட்ப செயற்பாடுகளில் அறிவு விரிவாக்கம் அதன் செல்நெறியில் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வகையில் தகவல் கற்றல் தளங்கள், தானியங்கு தரப்படுத்தலும் மதிப்பீடும் AIயினால் இயக்கப்படும் கல்விச் செயலிகள், விசேட கல்வியில் தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்றவைகளையும் இந்நூல் ஆராயத் தவறவில்லை.

மேலும், இந்தச் செயற்கை நுண்ணறிவு பாடசாலை ஆசிரியர்களின் வாண்மைக்கு மிகுந்த பயனை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் விரிவான சிந்தனை மற்றும் சிக்கலைக் கண்டு பிடிப்பது தொடர்பான வழிகாட்டலையும் இந்நூல் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

இருநூறு பக்கங்களைக் கொண்டமைந்த இந்நூல் பட்ட பின் கல்வி டிப்ளோமா, கல்விமாணி, கல்விமுதுமாணி மற்றும் கல்வியியல் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றுக்கு நிச்சயமாக ஒர் ஆதார நூலாகவும் சிறந்த உசாத்துணையாகவும் மிளிரும் என்பதில் ஐயமில்லை.

அறிவு மையச் சமூகம் அறிவுப் பொருளாதாரத்தை வேண்டி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், நவீன கால கல்வியியல் போக்கை நன்கு விளங்கி அது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, கல்விக்கேற்ற சமூகம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏற்ற கல்வி மலர இந்நூலும் காத்திரமான பங்களிப்பினை நல்கும் என திண்ணமாக நம்பலாம்.

ஆர் சதாத்,
வலயக் கல்வி அலுவலகம், கிண்ணியா.
2026.03.04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *