Wednesday, July 22, 2026
Latest:
குச்சவெளி

தமிழகத்தில் திராவிட அரசியல் மாற்றமும் இலங்கையின் பொருளாதார எதிர்காலமும்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6)ஆற்றிய உரை

மீட்பு,புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை(கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதம்

கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே,

பாராளுமன்றத்திற்கு இன்று(6) சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விவாதம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக நிதி மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து நாம் விவாதிக்கின்ற ஒரு தருணம் இது.
​ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி ஒழுங்குமுறைகள் குறித்து விரிவான விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

​நாட்டின் தன்னாதிக்கம் மற்றும் இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் தொடர்பான விடயங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரின் எதிர்ப்புக்கள் மற்றும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
​கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அது தொடர்பான அரசியல் முடிவுகள் குறித்து ஜனாதிபதியின் உரையில் பல முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

நாங்கள் இன்று சபையில் இந்த முக்கியமான சட்டமூலம் மீது விவாதித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கின்ற தேர்தல் சம்பந்தமாக இங்கு சபையில் பலரும் கதைத்தார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் நாளை அல்லது நாளை மறுநாள் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுக்க இருக்கின்ற, பிரபல சினிமா நட்சத்திரமாக எங்களுக்கெல்லாம் அறிமுகமான, ஜோசப் விஜய் என்று தன்னை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு கிறிஸ்தவராகவே அடையாளப்படுத்துவதற்கு அதுவரையும் தான் தளபதி விஜய் என்று ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய பெயரை வேண்டுமென்றே ஜோசப் விஜய் என்று சொன்னதன் மூலம் தான் சார்ந்திருக்கின்ற சமயத்தை அடையாளப்படுத்துகின்ற ஒரு பெயரை தயங்காமல் குறித்துப் பேசி, இன்று முழு தமிழகத்திலும் அதிகூடிய ஆசனங்களை வென்ற ஒரு கட்சியாக, வெறும் இரண்டு வருடங்களுக்குள்ளாக மிகப்பெரிய இமாலய சாதனையைப் புரிந்திருக்கின்ற தளபதி விஜய் அவர்களுக்கு என்னுடைய கட்சியின் சார்பில் நான் என்னுடைய வாழ்த்துக்களைச் சமர்ப்பித்துக் கொள்ள விரும்புகிறேன்.

​இதில் ,சமயம் சார்ந்து தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் அப்படியான ஒரு பாரம்பரியம் இருக்கக்கூடாது, மொழி அடிப்படையில் ஒரே மொழியைப் பேசுகின்ற இனமாக நாங்கள் எங்களை மிகப் பெருமையோடு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்த உணர்வைத் தூண்டுகின்ற கருத்து வலுப்பெற்றது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் மூலம்தான் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

​அதே வேளை, எல்லாவற்றையும் முந்திக்கொண்டு, இலங்கையில்தான் தந்தை செல்வா எனப்படுகின்ற தனிப்பெரும் ஆளுமையை ஒரு கிறிஸ்தவராக இருந்தார் என்பதற்காக ஒதுக்கி விடாமல், தங்களுடைய தானைத் தளபதியாக வரித்துக்கொண்டதன் மூலம் ஈழத்து மக்கள்தான் முதலில் எந்த மத அடையாளத்துக்கும் அடிமைப்படாமல் தங்களுடைய மொழி அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு தேசிய அடையாளத்துக்கு வழிகோலினார்கள் என்பது இங்கு பெருமையோடு நாங்கள் சொல்லுகின்ற விடயம்.

​இன்று இதைப் பற்றிப் பேசுகின்ற போது, நான் இந்த இடத்தில் மிகப் பெருமையோடு எங்களுடைய சிநேகக் கட்சிகள் சிலவற்றின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதையிட்டு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அபார வெற்றி, கேரள மாநிலத்தில் 22 உறுப்பினர்களை அவர்கள் வென்றெடுத்திருக்கிறார்கள். அதன் பொருட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு அண்மையில் ‘தகைசால் தமிழர் விருது’ முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் பெற்ற அவருக்கு நாங்களும் ஒரு பெரிய வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அதே நேரம் அவருடைய தலைமையில் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருக்கின்ற கேரளத்தைச் சேர்ந்த சாதிக் அலி தங்கல் அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 22 உறுப்பினர்களை கேரள மாநிலத்தில் வென்று, மிக விரைவில் ஐந்து அமைச்சரவை ஆசனங்களையும், அதே நேரம் துணை முதலமைச்சர் பதவியைப் பெற இருக்கின்ற அந்தக் கட்சியின் தேசியப் பொருளாளர், முன்னாள் மாநில உறுப்பினர் குஞ்சாலிக்குட்டி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

​அதே நேரம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாங்கள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெற்றி பெற்றதற்காக, குறிப்பாக என்னுடைய நண்பர் , தமிழ்நாட்டுக்குப் போகின்ற போது எப்பொழுதும் என்னோடு தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்ற பாபநாசம் தொகுதியின் புதிய உறுப்பினர் ஆடுதுறை ஏ. எம். ஷாஜகான் , வாணியம்பாடி உறுப்பினர் எஸ்.எஸ்.பி. சையது பாரூக் பாஷா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்ற அதே வேளை, தமிழகத்தில் ஏனைய சிநேகக் கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் நாகப்பட்டினம் தொகுதியை வென்ற பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிற மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுல் அன்சாரி , திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் வெற்றி பெற்றிருக்கிற அப்துல் வஹாப் , அத்துடன், விஜய் அவர்களுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிற முகம்மது பர்வேஷ் , ராணிப்பேட்டை தொகுதியை வென்றிருக்கின்ற சகோதரி தாஹிரா , காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வென்றிருக்கின்ற முகமது யூனுஸ் போன்றோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை இந்த உயர் சபையின் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

​இன்று இந்த அபார வெற்றியடைவதற்கு முன்பு இது சம்பந்தமாக ஆருடம் கூறிய பலரும், இந்த ‘விசிலடிச்சான் குஞ்சுகள் என்ன விசித்திரத்தைச் செய்யப் போகிறார்கள்’ என்று அலட்சியமாகப் பேசிய போதும், அவர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைகிற அடிப்படையில் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிற தமிழக புதிய முதலமைச்சராக வர இருப்பவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

​அதே வேளை,சாத்தியமில்லாத, யதார்த்தம் இல்லாத சில விடயங்களை உணர்ச்சிகரமாகப் பேசுவதன் மூலம் மாத்திரம் அரசியல் செய்யக் கூடாது. கச்சத்தீவைப் பற்றிப் பேசியிருந்தார், இரண்டு இறைமையுள்ள நாடுகளுக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டிருக்கின்ற விவகாரத்தை நாங்கள் மாற்றியமைப்போம் என்று சூளுரைப்பதை விடவும், அதைவிடவும் முக்கியமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும், இன்று தமிழ் பேசுகின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற வடக்கிற்கும் இடையிலே நாங்கள் புரட்சிக் கவிஞன் பாரதி அவரது கவிதையில் சொன்னதைப் போல ” சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நந்நாட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து… சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்று சொன்னதைப் போல, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைய இருக்கின்ற அந்த உத்தேச பாலத்தை அமைப்பதற்கு அவர் கூடிய கவனம் செலுத்த வேண்டும், அதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

​அதே நேரம் இன்று இங்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி நான் சொல்லியாக வேண்டும். இந்த நாட்டில் இருக்கிற தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக தமிழகத்தைக் கருதி விஷேடமாக எங்களைக் கௌரவப்படுத்துவதற்காக அவர் ‘அயலகத் தமிழர் தினம்’ என்ற ஒரு தினத்தை அடையாளப்படுத்தி அதைச் செய்து கொண்டு வந்தார். அவ்வாறான நல்ல விடயங்களை, அதே நேரம் தன்னுடைய கொள்கை சார்ந்து அவர் கடைப்பிடித்த கொள்கைகளின் ஊடாக ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒன்றை உருவாக்கி, மதச்சார்பற்ற அதே நேரம் மதவாதச் சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக தமிழகத்தை மாற்றியமைத்த பெருமை அவருக்குரியது. அவருடைய காலத்தில் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி தமிழகம் முழு இந்தியாவிலுமே ஆகக் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருகின்ற ஒரு மாநிலமாக அதை மாற்றி அமைக்கின்ற ஒரு பொருளாதார விருத்தியை அவர் செய்து காட்டினார் என்பதற்காக அவரை நாங்கள் வாழ்த்த வேண்டும்.
​அது மாத்திரமல்ல அவரின் வழியில் அவர் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகளின் ஆலோசனைகளோடு, தேர்தல் முடிந்த பிற்பாடு புதிய ஆட்சியைப் பிடிக்க இருக்கிற முதலமைச்சர்,இவ்வாறான விஷயங்களில் முன்னணி ஆட்சியாளர்களுடைய விமர்சனங்கள் எவ்வாறு இருந்தபோதிலும் ,அவருடைய சாதனைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அதே நேரம் மதவாதச் சக்திகள் தமிழகத்தில் தெற்கில் புகுந்து விடுவதற்கு இடம் கொடுக்காமல் அவர் செயல்பட வேண்டும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

​குறிப்பாக அவருடைய சாதனைகளில் ஒன்று, இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிறைய இடங்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்தமட்டில் இந்த சாதியக் கொடுமையில் இருந்து விடுபடுவதற்காக திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இவரும் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் ; வென்று காட்டி இருக்கிறார். அதைத் தொடர்ந்தும் செயல்படுத்துவதில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று அவரைப் பாராட்டுகின்ற அதே வேளை, இந்தத் தேர்தலில் பெருந்தன்மையோடு தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தோல்வி ஒவ்வொன்றும் அடுத்த கட்ட வெற்றிக்கு அடையாளமாகும் என்ற அடிப்படையில் செயல்படுகின்ற முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்.

மேலும்,நான் ஒரு சில வார்த்தைகள் இந்தச் சட்டமூலம் குறித்து ஆங்கிலத்தில் பேச விழைகிறேன்.
இன்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த குறிப்பிட்ட சட்டமூலத்தை நான் கையாள விரும்புகிறேன். இது மீட்பு, மறுவாழ்வு, நொடிப்புநிலை மற்றும் தனிப்பட்ட திவால்நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீட்பு, மறுவாழ்வு மற்றும் திவால்நிலை தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், 19 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட திவால் அவசரச் சட்டத்தை ரத்து செய்வதற்கும் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

​நாட்டில் முதலீடுகள் தொடர்பாக பொது நிதிக் குழுவின் முன் அவர் வந்தபோது, இந்தியாவில் 2016இல் இயற்றப்பட்ட ‘திவால் மற்றும் திவால் நிலைச் சட்டம்’ (IBC) குறித்து நாம் படிப்பது அவசியம்.என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐந்தொகையில் 9% ஆக இருந்த செயல்படாத கடன்களை 2% அல்லது அதற்கும் கீழாக மாற்றுவதில் அது வெற்றி பெற்றுள்ளது. திவால் மற்றும் திவால் நிலை நெறிமுறைகளை அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். குறிப்பாக காலவரையறைக்குட்பட்ட பயிற்சிகள், இந்த சட்டம் ஆரம்ப காலகட்டமாக 2 மாதங்களை மட்டுமே வழங்குகிறது.
​துயரத்தில் உள்ள எந்தவொரு கூட்டாண்மையும் மறுவாழ்வு பெற, இங்கு திவால் நெறிமுறையானது முதல் காலகட்டத்திற்கு 180 நாட்களை (கிட்டத்தட்ட 6 மாதங்கள்) வழங்குகிறது, மேலும் இது அதிகபட்சமாக 360 நாட்கள் வரை காலவரையறைக்குட்பட்ட நடவடிக்கையை செயல்படுத்துகிறது. எனவே தொடக்கத்திலிருந்தே பல சொத்துக்களைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கும் போது, முதலீட்டாளர்களை சமாதானப்படுத்துவது முக்கியம். மேலும் நீங்கள் இதைக் கட்டுப்பாட்டிலிருந்து கடன் கட்டுப்பாட்டிற்கு மாற்றுகிறீர்கள், இது நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவ ஒரு திட்டத்தை எளிதாக்கும் ஒரு விடயமாக மாறுகிறது.

​இது தொடர்பாக நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.”தித்வா” புயல் காற்றுக்குப் பிறகு தங்கள் சொத்துக்களை இழந்த தரப்பினருக்கு உதவ முன்வருவதில் இந்த அரசாங்கத்தின் தோல்வி காணப்படுகிறது. உதாரணமாக, நான் பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்டதில் , மத்திய வங்கி வங்கித் துறையின் ஒதுக்கீடு சுமார் 2000 மில்லியன் மட்டுமே வங்கிகளால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறியதை நான் பார்த்தேன். 4000 அல்லது 3000 மில்லியன் என்று தேவைப்படும் நிலையில் மிகவும் வருத்தமளிக்கும் விதமாக 2000 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது வங்கிகளின் தயக்கம் மற்றும் மனப்பான்மையின் காரணமாகும், இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். .

​எனவே இதன் மூலம் இப்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம் வழங்கப்படும் என்று அரசாங்கம் சொன்னது என்ன ஆனது? மக்கள் எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டார்கள் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள். மேலும் நன்கொடைகள் மூலம் கிட்டத்தட்ட 8000 மில்லியன் பணம் சேகரிக்கப்பட்டது, அது முறையாக அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதா? அந்தப் பிரச்சினை மிக விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

(தொகுப்பு:விருட்ச வேந்தன்)

Abdul Razak Muzammil

A. R. Muzammil Bsc (Hons) UK is the Founder & Editor‑in‑Chief of KVC Media, a digital news platform serving Sri Lanka and the Middle East, and the Founder of the Riaya Foundation, which empowers youth in Kuchchaveli. Professionally, he serves as the Assets & CAFM Manager at an International Airport, bringing over 14 years of expertise to major infrastructure projects. In 2026, he became Sri Lanka’s first CAMA² certified professional. Holding a BSc (Hons) from the University of Westminster, Muzammil bridges the gap between technical leadership and community-driven media innovation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *