ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை ரத்து செய்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்; வளைகுடா நாடுகள் விடுத்த அவசர கோரிக்கை!
வளைகுடா நட்பு நாடுகளின் தலையீட்டால் தவிடுபொடியான போர் அபாயம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் தீவிர பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மீது செவ்வாய்க்கிழமை (மே 19, 2026) நடத்த திட்டமிடப்பட்டிருந்த மிகப்பாரிய இராணுவத் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய நட்பு நாடுகளான சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் தலைவர்கள் விடுத்த கூட்டு வேண்டுகோளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், கட்டார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர் ஈரானுடன் தற்போது “தீவிரமான பேச்சுவார்த்தைகள்” (Serious Negotiations) ஆரம்பமாகியுள்ளதாக டிரம்ப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் இருதரப்புக்கும் உடன்பாடான ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதால், தாக்குதலை கைவிடுமாறு டிரம்ப்பிடம் கோரியிருந்தனர்.
“ஈரானுக்கு அணு ஆயுதம் கிடையாது” – டொனால்ட் டிரம்ப் உறுதி
நட்பு நாடுகளின் தலைவர்கள் மீதுள்ள மரியாதையின் காரணமாக இந்த தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப்படை தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய பேச்சுவார்த்தை உடன்படிக்கையின் மூலம், “முக்கியமாக ஈரானுக்கு அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை” (NO NUCLEAR WEAPONS FOR IRAN!) என்ற நிலை உறுதி செய்யப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
படைகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
இருப்பினும், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானது என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், மிகக் குறுகிய கால அறிவிப்பில் ஈரான் மீது முழு அளவிலான, மிகப்பாரிய தாக்குதலை (Full scale assault) நடத்துவதற்கு அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் கடற்படைகள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றத்தை தணிக்க வளைகுடா நாடுகள் எடுத்து வரும் இந்த முயற்சி சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
