News

தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒப்பந்தம் கைச்சாத்து
மூதூரிலும், குச்சவெளியிலும் தவிசாளரை பகிர்ந்து கொள்ள இணக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரு உள்ளுராட்சி மன்ற சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (27) திருகோணமலையில் கைச்சாத்திடப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் இன்று (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் மற்றும்; இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வதெனவும், மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது என இணங்கிக் கொண்டுள்ளனர்.

அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்;; உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது எனவும் இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர். அத்துடன் மூதூர் சபையில் ஆட்சியமைப்பதற்காக மேலும் சில உறுப்பினர்களின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதைவிட திருகோணமலை மாநகரசபை, நகரமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மூதூர் பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் 5 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 4 உறுப்பினர்களும், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 2 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 2 உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சுயேட்சைக்குழு சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அதேபோன்று குச்சவெளி பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 5 உறுப்பினர்களும், இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 2 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சைக்குழு சார்பாக தலா 1 உறுப்பினருமாக 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *