Breaking NewsLatestWorld

ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய தூதரகம் கடும் பதிலடி; இலங்கையில் பரபரப்பு

இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொழும்பிலுள்ள அதன் பிரதிநிதிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. உக்ரைனிய சிறுவர்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட “பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை” நிறுத்துமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என நிராகரிப்பு

சுமார் 20,000 உக்ரைனிய சிறுவர்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு கடத்தியுள்ளதாகவும், அவர்கள் பற்றிய தகவல்களை மறைப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை” என ரஷ்ய தூதரகம் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையே ரஷ்யா மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

கத்தார் தூதரகத்திற்கு நன்றி

பிரிந்துள்ள சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு கத்தார் மத்தியஸ்தர்கள் வழங்கி வரும் ஆதரவிற்கு ரஷ்யா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதை ஐரோப்பிய ஒன்றியம் தவிர்க்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ள உக்ரைனிய சிறுவர்களின் அவலநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ரஷ்யா சாடியுள்ளது.

“எந்தவொரு ரஷ்ய எதிர்ப்புச் செய்திகளுக்கும் அல்லது நடவடிக்கைகளுக்கும் எதிராக கடுமையான எதிர்வினையாற்றும் உரிமை தூதரகத்திற்கு உண்டு” என அந்த அறிக்கையின் இறுதியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.