திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது!!
குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர் நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் குறித்த கிணறானது பெக்கோ இயந்திரம் மூலம் இன்று அகழ்வு செய்யப்படபோதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேருநுவர-தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி வயது (25) என தெரியவருகின்றது.
மீட்கப்பட்ட சடலமானது சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அத்தோடு யுவதியின் கைப் பையும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி , காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
