News

சிறுமிகளை போன்று சிறுவர்களை பாதுகாக்கவும் சட்டம் – 20 ஆண்டுகள் சிறை!

சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதை போன்று சிறுவர்கள் மீது பலாத்காரம் மேற்கொள்வோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சகம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இப்போது வரை, சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வது கடுமையான பாலியல் துஸ்பிரயோகம் என வகைப்படுத்தப்பட்டுள்ள போதும், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

எனினும் சிறுவர்களை பலாத்காரம் செய்யும் குற்றம் தொடர்பிலான சர்வதேச சட்டங்களைக் கருத்தில் கொண்டு இலங்கையிலும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சட்டப்பூர்வ கற்பழிப்பு தொடர்பான சட்டங்களையும் நீதி அமைச்சகம் திருத்தியுள்ளது.

தற்போது, 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்வது என்பது குறித்த சிறுமியின் சம்மதத்துடன் அல்லது இல்லாமலேயே சட்டப்படி கற்பழிப்புக்கு சமமானதாகும்.

இருப்பினும், ஒரு காதல் உறவின் காரணமாக உடலுறவுகள் அமையும் நிகழ்வுகளையும் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

அதன்படி, 14-16 வயதுடைய சிறுமிகள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இடையிலான சட்டரீதியான பலாத்கார வழக்குகள் தொடர்பாக தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை மேல்நீதிமன்றத்திற்கு வழங்கும் வகையில் சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது, சட்டப்படி கற்பழிப்பு குற்றத்திற்கு உள்ளாகும் நபருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையே காதல் உறவு இருந்ததாகவும், அவர்கள் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் திருப்தி அடைந்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க இந்தத் திருத்தம் உதவும் என்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *