img 4558

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொஃப்ட் (Microsoft), தகுதியான ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து தன்னார்வமாக வெளியேறுவதற்கான புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று துணைத் தலைவரும் பிரதம மனிதவள அதிகாரியுமான எமி கோல்மன் (Amy Coleman), 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைப்பதிவில் இதனை அறிவித்துள்ளார்.

நான்கு நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு வாய்ப்பு

கனடா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள, பங்கேற்கும் நிறுவனப் பிரிவுகளைச் சேர்ந்த 70ஆம் நிலை மற்றும் அதற்குக் கீழுள்ள தகுதியான ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

Voluntary Exit Offer (VEO) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்பும் தகுதியான ஊழியர்களுக்கு நிதி உதவியும் தொழில் திட்டமிடல் தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் தன்னார்வத் திட்டமாகும். இருப்பினும், மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன?

வணிக முன்னுரிமைகள், வாடிக்கையாளர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணியாளர் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில், எந்தெந்த பிரிவுகள் இத்திட்டத்தில் பங்கேற்கும் என்பது தீர்மானிக்கப்படும் என மைக்ரோசொஃப்ட் தெரிவித்துள்ளது.

மேலும், இத்திட்டத்திற்குத் தகுதியான ஊழியர்களுக்கு அவர்களுக்கான விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான இணைப்புடன் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் தொழில் வாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம்

ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், தங்களுக்குப் பொருத்தமான எதிர்காலத் தொழில் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கவும் மைக்ரோசொஃப்ட் தொடர்ந்து ஆதரவளிக்கும் என எமி கோல்மன் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பணியாளருக்கும் அல்லது நிறுவனப் பிரிவுக்கும் ஒரே அணுகுமுறை பொருந்தாது என்பதைக் கருத்திற்கொண்டு, நிறுவனத்தின் தேவைகளுக்கும் ஊழியர்களின் எதிர்கால இலக்குகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைப்பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *