Breaking NewsSri Lanka

அதிரடி: தரமற்ற உருக்கு கம்பிகள் தயாரிப்பு – ஹோமாகம தொழிற்சாலைக்கு சீல்!

ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள பாரிய தொழிற்சாலை ஒன்று, இலங்கை தரக்கட்டளை நிறுவகத்தின் (SLS) அனுமதியின்றி தரமற்ற உருக்கு கம்பிகளைத் தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் (CAA) நேற்று (மே 09) சீல் வைக்கப்பட்டது.

3 ஆண்டுகளாக நடந்த மோசடி

குறித்த தொழிற்சாலை கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வந்துள்ளதோடு, ஏனைய உற்பத்திப் பொருட்களுடன் 6mm அளவிலான உருக்கு கம்பிகளையும் தயாரித்து சந்தைக்கு விநியோகித்து வந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் இந்தத் திடீர் சோதனையை முன்னெடுத்தனர்.

SLS 375 தரக்கட்டளை மீறல்

கட்டிட நிர்மாணப் பணிகளில் பயன்படுத்தப்படும் உருக்கு கம்பிகளுக்கான SLS 375 தரக்கட்டளையை இந்தத் தயாரிப்புகள் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தரமற்ற இக்கம்பிகள் கட்டிடங்களின் உறுதித்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை மற்றும் எச்சரிக்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த நிறுவனத்திற்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. பொதுமக்கள் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக உருக்கு கம்பிகளை கொள்வனவு செய்யும் போது, அதில் SLS 375 முத்திரை இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.