லத்தீப் பாரூக்
பாகிஸ்தானில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அல்லது பிடிஐ தலைமையில் பாகிஸ்தான் முழுவதும் பெரிய அளவிலான பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கவும், முறையான மருத்துவ பராமரிப்பு மற்றும் குடும்பத்தவர்களையும் சட்டப் பிரதிநிதிகளையும் சந்திக்க இம்ரானுக்கு அனுமதி வழங்குமாறும், ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இம்ரான் கானின் கட்சியின் கோட்டையான, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத்திய ஆட்சியின் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பி. டி. ஐ தலைமைக்கும், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கூட்டாட்சி அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டதை அடுத்து, 2026 அக்டோபர் 4, அன்று இஸ்லாமாபாத்தை நோக்கி ஒரு நாள் நீண்ட அணிவகுப்பு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சோஹைல் அஃப்ரிடி உட்பட பிராந்திய ரீதியான அரியல் தலைமைகளின் கைதுகள், மற்றும் கைபர் பக்துன்க்வாவில் ஆளுநர் ஆட்சி திணிக்கப்பட்டமை, என்பனவற்றைத் தொடர்ந்து, இராணுவ ஆதரவுடன் செயற்படும் மத்திய கூட்டாட்சிக்கும், பி. டி. ஐ ஆதரவாளர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளும் தோல்வி கண்டன. அதன் விளைவாக தற்போது அங்கு பெரிய அளவிலான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, பதற்றங்களும் அதிகரித்துள்ளன.
அவசரகால ஆட்சியின் கீழ் மாநில அரசாங்கத்தை இடைநீக்கம் செய்வதன் மூலமும், இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகளை தடுத்து வைப்பதன் மூலமும், மத்திய அரசும் இராணுவமும், இந்த மக்கள் அணிவகுப்புக்கு பதிலளித்து வருகின்றன. இது இம்ரான் கான் தரப்புக்கும் நாட்டின் இராணுவ பிரிவுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் தற்போது அவசரகால நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு, இராணுவ துருப்புக்களும் குவிக்கப்பட்டுள்ளன்.
ஏற்கனவே எதிர்பார்த்தபடி, 2026 அக்டோபர் 11, அன்று, மத்திய அரசு, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் 12 மாவட்டங்களில் அவசரகால ஆட்சி நிலையை அமுலுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் முழு நாடும் தற்போது பாகிஸ்தான் இராணுவத் தலைவர் சையத் அசிம் முனிர் அகமதுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால் “எனக்கு மிகவும் பிடித்த பீல்ட் மார்ஷல்” என்று வர்ணிக்கப்பட்டவர் தான் இந்த இராணுவத் தலைவர் சையத் அசிம் முனிர் அகமது. அசிம் முனீரை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பகிரங்கமாக பாராட்டிய 10 வது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் முனீரை “ஒரு சிறந்த போராளி”, “மிக முக்கியமான மனிதர்” மற்றும் “விதிவிலக்கான மனிதர்” எனறெல்லாம் ட்ரம்ப் வர்ணித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் இடம்பெற்ற அவர்களின் முதலாவது சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி, பாகிஸ்தான் இராணுவத் தலைவரைச் சந்திப்பதில் “பெருமை” அடைவதாகவும் கூறினார்.
காசாவில் பலஸ்தீனர்களை கொல்வதற்கும், மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீன மக்களின் நிலங்களை சூறையாடுவதற்கும், இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகளுக்கு உதவும் வகையிலும், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரமாணம் செய்துள்ள எதிரியான டொனால்ட் டிரம்புடன், அசிம் முனீர் நடத்தி வரும் புனிதமற்ற தேனிலவு தான் அவருக்கு அமெரிக்க அதிபரிடம் இருந்து இத்தகைய பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளன.
மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள அவசரகால விதிகளை பி. டி. ஐ நிராகரித்துள்ளது. தமது தலைவரை சிறையில் இருந்து விடுவிக்க, கானின் ஆதரவாளர்கள் பிரயோகித்து வரும் அழுத்தம் காரணமாகவும், இஸ்லாமாபாத்துக்குள் தாங்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்கவுமே இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்றால், ஊழல் விசாரணைகள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 2019 ஜூன் மாதம் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து அசிம் முனீரை இம்ரான் கான் நீக்கினார். அப்போது அவர் எட்டு மாதங்கள் மட்டுமே அந்தப் பதவியை வகித்திருந்தார்.
இம்ரான் கான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மேற்கொண்ட சில செயற்பாடுளைக் காரணம் காட்டி 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் நோக்கம் கொண்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று பி. டி. ஐ கூறுகின்றது. இன்றைய நிலையில் ஆட்சி மற்றும் அமைச்சரவை நியமனங்களில் இடம்பெற்று வரும் இராணுவத்தின் அதிகரித்த தலையீடு, மாநிலங்களின் நிர்வாக சரிவு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பன பற்றிய விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் (இடது) மற்றும் பீல்ட் மார்ஷல் அசிம் முனிர் (வலது) ஆகியோர் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த போது….
எல்லா வகையிலும் அதிகார பலம் கொண்ட அசிம் முனிர் பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் தலைவராகவும் உள்ளார். பாகிஸ்தானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் இராணுவ கட்டமைப்பு மாற்றங்கள், அசிம் முனீருக்கு, இதற்கு முன் எந்தவொரு இராணுவ தளபதிகளுக்கும் வழங்கப்படாத அதிகாரங்களை தாராளமாக வழங்குகின்றன. இவற்றில் மூத்த இராணுவ அதிகாரிகள் மீதான அதிக கட்டுப்பாடு, தேசிய பாதுகாப்பில் மையப் பங்கு, பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டமைப்பில் வலுவான செல்வாக்கு என்பனவும் அடங்கும். அவருக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப்பூர்வமான விடுபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது பொறுப்புக்கூறல், பொதுமக்களின் உரிமையான மேலாதிக்கம் மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களின் சுதந்திரம் என்பன பற்றிய கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்த மாற்றங்கள், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அசிம் முனீரின் வளர்ந்து வரும் அதிகார பலம் என்பன பற்றிய முக்கியமான கேள்விகளையும், கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன. ஆகஸ்ட் 20 அன்று, பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் இரண்டு முக்கிய சட்டங்கள், வெறும் 30 நிமிடங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன. இது நாட்டின் இராணுவ அமைப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் அணுசக்தி கட்டளை அமைப்பு மீது முனீரின் அதிகாரத்தை ஸ்திரமாக வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அரசியலமைப்பு மற்றும் சட்ட மாற்றங்கள் மூலம் முனீரின் புதிய அதிகார மாதிரிகளை, அயூப் கான், யஹ்யா கான் ஆகியோரின் கீழ் இருந்த பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில், அவை நீண்ட வரலாறுகளையும் கொண்டிருந்ததால், இது ஒன்றும் புதிதல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அவர்களது தவறுகள் பாகிஸ்தானை பிளவுபடுத்தி, பங்களாதேஷை உருவாக்கின. சியா-உல் ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப். போன்றவர்கள் மாகாண அல்லது தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அதிகாரத்தில் இருந்து அகற்றியமை, எப்போதும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளன என்பதையும் வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்கள், பின்னர் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியால் அங்கீகரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டன. “திருவாளர் பத்து சதவீதம்” என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட சர்தாரி, 1990 களில்,அவரது மனைவியான முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பதவிக் காலத்தில், முக்கிய அரசாங்க ஒப்பந்தங்களில் இலஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டவர் என்பது இங்கே நினைவூட்டத்தக்கது. 1990 க்கும் 2000த்துக்கும் இடைப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஊழல் முதல் கொலை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறையில் கழித்தவர். 1999 ஆம் ஆண்டில், அவரும் அவரது மனைவி பூட்டோவும் லஞ்சம் வாங்கியதாகவும் லாகூர் உயர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டனர். இருப்பினும் அவற்றுகான தண்டனை மற்றும் தொடர்புடைய சுவிஸ் பணமோசடி வழக்குகள் என எல்லாமே பின்னர் இரத்துச் செய்யப்பட்டன. அல்லது மேல்முறையீடு செய்யப்பட்டன. போலி வங்கிக் கணக்குகளை நடத்தி வந்தமை, நாட்டுக்கு வெளியே ஏராளமான பணத்தை மோசடி செய்தமை என்பன தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தால் (என்ஏபி) 2019 ஜூன் மாதத்தில் இஸ்லாமாபாத்தில் சர்தாரி கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றைய பிரதமர் மியான் முகமது ஷெபாஸ் ஷெரீப், ஒரு அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். அவர் 2024 முதல் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகிக்கின்றார். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் உறுதி பூண்டுள்ள, நமது அன்பான நபிகள் நாயகத்தை பகிரங்கமாக கேலி செய்துள்ள, டொனால்ட் டிரம்பை சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தவர் தான், இந்த ஷாபாஸ் ஷெரீப்
இம்ரான் கான் தற்போதைய பிரதமர் ஷெரீப்பின் முக்கிய அரசியல் எதிரியாக உள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், இம்ரான் கான் கணிசமான மற்றும் ஆர்வமுள்ள மக்களின் ஆதரவு தளத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவர் பாகிஸ்தானின் கொந்தளிப்பான அரசியல் நிலப்பரப்பின் மையத்தில், இன்னமும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்..
பாகிஸ்தானின் இன்றைய தலைவர்கள் மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நசுக்கி ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் தான், இப்போதுள்ள கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள். கடுமையான அரசியல் ஸ்திரமின்மை, மோசமடைந்து வரும் பசி மற்றும் நீர் நெருக்கடி, மத்திய அரசின் அவசரகால ஆட்சி பிரகடனம், மற்றும் கைபர் பக்துன்க்வாவில் மாகாண அரசாங்கத்தை இடைநீக்கம் செய்தமை மூலம் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அழுத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆழமான பன்முக நெருக்கடியை பாகிஸ்தான் இன்று எதிர்நோக்கி உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தொலைதூர நகரமான லக்கி மார்வத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மிகக் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மை தான், பாகிஸ்தானின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை. இது மோசமான வறுமை, பணவீக்கம், தீவிரமான இராணுவ மேலாதிக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி என்பனவற்றோடு பின்னிப் பிணைந்த பிரச்சினையாகும். இது அந்த நாட்டை கிட்டத்தட்ட இறையாண்மை சரிவு நிலைக்கு தள்ளியுள்ளது. நாடு தீவிரவாத தாக்குதல்களின் மீள் எழுச்சியை எதிர் கொண்டுள்ள ஒரு கால கட்டத்தில், பாகிஸ்தானின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை, மேலும் ஆழமாக்கும் வகையில், தற்போதைய நிலை பயங்கர கட்டத்தை அடைந்துள்ளது.
நாட்டின் நான்கு பாரம்பரிய மாகாணங்களை 12 முதல் 15 (அல்லது 160 வரை) சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிப்பதற்கு அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது நாட்டின் அரசியல் சமநிலையை மாற்றி அமைக்கக்கூடும் என அவர் நம்புகின்றார்..
“இவை எல்லாமே தற்போது இடம்பெற்று வரும் நீண்ட அணிவகுப்பு காரணமாக நடக்கின்றது என்று நான் நம்பவில்லை. ஒருவேளை இது கடைசி முயற்சியாகவும் இருக்கலாம். அல்லது எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக சொல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.” என்று பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஆரிஃபா நூர் என்பவர் கூறுகின்றார். “வெள்ளை மாளிகையின் ஆதரவு பூரணமாக உள்ளது என்ற ஒரே காரணத்தில், இராணுவம் முழுமையான நம்பிக்கையுடன் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடு தனது இரண்டு அண்டை நாடுகளுடன் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளது. அதில் ஒன்று, பாகிஸ்தான் பலமுறை ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதுடன், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் தனக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
மற்றது இந்தியாவுடனான அதன் நீண்டகால மோதல் மீண்டும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறான ஒரு மோதல் மீண்டும் தலைதூக்க, நீண்ட கால அவகாசமும் தேவை இல்லை.
இவ்வளவு பதற்றங்குக்கு மத்தியிலும், ஹவுத்தி கெரில்லாக்களின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவைப் பாதுகாக்க பாகிஸ்தான் 47 பேர் கொண்ட தனது படை அணியொன்றை அனுப்பியுள்ளதாகவும். “இந்த பாகிஸ்தான் வீரர்கள் தற்போது ஹவுத்திகளிடம் சரண் அடைந்துள்ளனர்”. என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு எதிர்கொண்டுள்ள சவால்களைப் பார்க்கும்போது, இந்த சக்திகள் பாகிஸ்தான் முழுவதும் தமது அதிகாரத்தை மேலும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் எதிர்ப் பார்க்கப்படுகின்றது.
பிரச்சினையின் முக்கிய அம்சம் என்னவென்றால், இம்ரான் கான் இஸ்லாமிய கண்ணோட்டத்தை ஆதரித்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானை, சுதந்திரமான தனது சொந்தக் காலில் நிற்கும், ஒரு தன்னிறைவு பெற்ற தேசமாகக் கட்டி எழுப்ப அவர் விரும்பினர். இந்த கண்ணோட்டம் தொடர்பாக அவர் மலேசியாவின் புகழ்பூத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். ஜனநாயகம் செழித்தோங்கும் ஒரு நாட்டின் வளர்ச்சியில் அதன் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
எவ்வாறாயினும், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் அவர்களின் சவுதி அடிமைகள் பாகிஸ்தான் தங்கள் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு அடிமையாக இருக்க வேண்டும் என்பதையே விரும்பினர். எனவே இம்ரான் கானை அதிகாரத்திலிருந்து அகற்றி, பிராந்தியத்தில் அவர்களின் தீய வடிவமைப்புகளுக்கு சேவை செய்ய அசிம் முனீர் போன்ற ஒரு துரோகியை அதிகாரத்தில் அமர்த்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இம்ரான் கானை அதிகாரத்திலிருந்து தூக்கி அசிம் முனீரை ஆட்சிக்குக் கொண்டுவர பாகிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மற்றவர்களையும் வாங்க பில்லியன் கணக்கானடொலர்கள் செலவிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த வரலாறு.
ஆக மொத்தத்தில் இன்றைய பாகிஸ்தான் ஸ்திரமின்மையை நோக்கி வேகமாக நகருகின்றது.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile
