இலங்கை மற்றும் அசர்பைஜான் இடையிலான அரச சேவை நவீனமயமாக்கல் ஒப்பந்தம்

அரச சேவைகளை நவீனமயப்படுத்துவதற்கும், பொதுத்துறை புத்தாக்கத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இலங்கையும் அசர்பைஜானும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளன.

அசர்பைஜானின் அரச பொதுச் சேவைகள் மற்றும் சமூக புத்தாக்கங்களுக்கான நிறுவனத்திற்கும், இலங்கையின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் இடையில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, 2026 நவம்பர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் அசர்பைஜானில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை புத்தாக்க மன்றத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பயிற்சித் திட்டங்கள், பயிலுநர் பயிற்சிகள் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றம் ஆகியவற்றின் ஊடாக அரச சேவைகளை நவீனமயப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், தரமான மற்றும் வினைத்திறனான அரச சேவைகளை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்குவதுடன், சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த மதிப்பீட்டு நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

இதற்கான முன்மொழிவை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆதாரங்கள்: அமைச்சரவைத் தீர்மானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *