துபாய்: பிறவியிலேயே ஏற்பட்ட அரிய இதயக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இரண்டு மாதக் குழந்தை தன்யா சங்க்தானிக்கு அவசர இதயச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பம் 146,515 திர்ஹாம் நிலுவை மருத்துவக் கட்டணத்தையும், எதிர்வரும் இதய அறுவை சிகிச்சைக்காக மேலும் 250,000 முதல் 300,000 திர்ஹாம் வரையிலான செலவையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த குடும்பத்திற்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து Gulf News செய்தி வெளியிட்டுள்ளது.
தன்யா தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதுடன், குடும்பத்தினரின் கண்காணிப்பில் சிகிச்சைக்குப் பிந்தைய மீட்புப் பராமரிப்பைப் பெற்று வருகிறார். எனினும், அவரது இதயக் குறைபாட்டை நிரந்தரமாகச் சீர்செய்வதற்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அவசியமாகியுள்ளது.
பிறந்த சில வாரங்களிலேயே ஏற்பட்ட உயிராபத்து
2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி துபாயில் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒருவராகத் தன்யா பிறந்தார். பிறக்கும்போது அவரது எடை சுமார் 1.4 கிலோகிராமாக இருந்தது.
குழந்தை பிறப்பதற்கு முன்னர் இதயக் குறைபாடு கண்டறியப்படவில்லை என அவரது தந்தை துர்கேஷ் சங்க்தானி தெரிவித்துள்ளார்.
பிறந்த பின்னர் குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இதயக் குறைபாடு கண்டறியப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வரும் துர்கேஷ், விற்பனைத் துறையில் பணியாற்றி வருகிறார். மகளின் உடல்நிலை, தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அதற்கான செலவுகள் குடும்பத்தினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
என்ன இதயக் குறைபாடு?
Gulf News பார்வையிட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, தன்யாவுக்கு Mixed-type Total Anomalous Pulmonary Venous Connection (TAPVC) எனப்படும் அரிய பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, நுரையீரலில் ஒட்சிசன் பெற்ற இரத்தத்தை இதயத்தின் இடது பக்கத்திற்குக் கொண்டு செல்லும் நுரையீரல் சிரைகள், தன்யாவின் நிலையில் இயல்பற்ற பாதைகளில் இதயத்துடன் இணைந்துள்ளன. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
குழந்தைக்கு சுமார் நான்கு வாரங்கள் ஆனபோது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.
மூன்று நாட்களாக அதிகரித்த மூச்சுத்திணறல் மற்றும் உடலில் ஒட்சிசன் அளவு குறைவதால் தோல் நீல நிறமாக மாறும் அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது இரத்த ஒட்சிசன் செறிவு சுமார் 70 சதவீதமாகக் குறைந்திருந்ததுடன், சுவாசச் செயலிழப்பும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் இதயத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர இதயச் சிகிச்சையால் உடல்நிலையில் முன்னேற்றம்
குழந்தையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மருத்துவர்கள் Balloon Atrial Septostomy எனப்படும் அவசர சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்தச் சிகிச்சையில், இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையிலுள்ள திறப்பு விரிவாக்கப்பட்டு, இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது.
மருத்துவ அறிக்கையின்படி, சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் மூச்சுவிடும் நிலை, இதய அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
பின்னர் மேலதிக ஒட்சிசன் உதவியின்றி சுவாசிக்கவும், வாய்வழியாக உணவு உட்கொள்ளவும், உடல் எடையை அதிகரிக்கவும் குழந்தையால் முடிந்தது.
எனினும், இந்தச் சிகிச்சை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்கியுள்ளது. பிறவியிலேயே ஏற்பட்ட இதயக் குறைபாட்டை நிரந்தரமாகச் சீர்செய்ய திறந்த இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
குழந்தை வலுப்பெற்ற பின்னர், எதிர்வரும் மாதங்களில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவரது மாமா கமால் சங்க்தானி தெரிவித்துள்ளார்.
146,515 திர்ஹாம் மருத்துவக் கட்டணம் நிலுவை
குழந்தைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி மற்றும் இதய வடிகுழாய் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்காக மொத்தம் 147,065.80 திர்ஹாம் மருத்துவக் கட்டணம் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் பகிர்ந்துள்ள கட்டண விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஆரம்பக் கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் 146,515.80 திர்ஹாம் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, எதிர்வரும் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு 250,000 முதல் 300,000 திர்ஹாம் வரை செலவாகும் என குடும்பத்தினர் மதிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்தினரின் மருத்துவக் காப்புறுதியில் உள்ள வரம்புகள் காரணமாக, சிகிச்சைக்கான முழுச் செலவையும் காப்புறுதியால் ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக துர்கேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குச் செல்வதைவிட UAE-யில் சிகிச்சை பெற விருப்பம்
இந்தியாவில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் செலவு குறைவாக இருக்கலாம் எனக் குடும்பத்தினர் பரிசீலித்துள்ளனர்.
ஆனால், குழந்தையின் தற்போதைய மருத்துவ நிலையை கருத்தில் கொள்ளும்போது விமானப் பயணம் அதிக ஆபத்தைக் கொண்டிருக்கலாம் என்றும், பயணத்திற்குச் சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படலாம் என்றும் துர்கேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால், சாத்தியமானால் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே மகளுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தினர் விரும்புகின்றனர்.
குழந்தையின் தற்போதைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான நிரந்தரச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செலவுகளைச் சமாளிப்பதும் குடும்பத்தின் முக்கிய கவலையாக உள்ளன.
இந்தச் செய்தி Gulf News வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. குழந்தையின் மருத்துவ நிலை, நிலுவைக் கட்டணம் மற்றும் எதிர்கால அறுவை சிகிச்சைக்கான செலவு ஆகியவை குடும்பத்தினர் பகிர்ந்த தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் தொடர்பான செய்தியின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. நிதியுதவி வழங்க விரும்புவோர், குடும்பம் அல்லது சம்பந்தப்பட்ட மருத்துவமனை மூலம் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே பணம் அனுப்புவது பாதுகாப்பானது.
ஆதாரங்கள் : Gulf News வெளியிட்ட செய்தி மற்றும் அதில் குறிப்பிடப்பட்ட மருத்துவ அறிக்கை, மருத்துவமனைக் கட்டண விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. தன்யாவின் குடும்பத்தினரிடமிருந்து KVC Media நேரடியாகத் தகவல்களைப் பெறவில்லை.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

