கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடைக்கு அனுமதி மறுப்பு: அரசுக்கு எதிராக எழும் கேள்விகள்!
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று கடமையேற்கச் சென்ற 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அடிப்படை மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பேணி, அரச சட்ட விதைகளுக்கு உட்பட்டு சீருடை அணிவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளன.
அரச சுற்றுநிருபமும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டும்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சீருடை தொடர்பான அரச சுற்றுநிருபங்கள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் காணப்படுகின்றன. இசுலாமிய மார்க்கம் மற்றும் ஏனைய மதங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் தங்களது மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பேணியவாறு, அரச சேவையின் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு சீருடை அணிவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சீருடை அணியும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களும் குறித்த சுற்றுநிருபங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த நாட்டின் சட்ட விதிகளுக்கும் அரச சுற்றுநிருபங்களுக்கும் முற்றிலும் முரணான வகையிலும், தன்னிச்சையாகவும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினரும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர். அரச பதவிகளில் அமர்த்தப்படும் அதிகாரிகள் நாட்டின் பொதுச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர, தங்களது சுய விருப்பங்களுக்கு ஏற்ப புதிய கட்டுப்பாடுகளை திணிக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் வாதமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பின் வேதனையும் கள விஜயமும்
வேலைவாய்ப்பு பெற்று, பெரு எதிர்பார்ப்புகளுடன் கடமையேற்கச் சென்ற ஏழை எளிய பின்னணியைக் கொண்ட 9 பெண் சுகாதார உதவியாளர்கள் இவ்வாறான திடீர் கெடுபிடிகளாலும், கலாச்சார ஒடுக்குமுறைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்களது மத உரிமைகளைப் பேணுவதா அல்லது ஜீவனோபாயத்துக்காக உரிமைகளைப் பணையம் வைப்பதா என்ற இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விகாரகம் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து, உடனடியாக விழித்துக்கொண்ட சமூக நீதிக்கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) நேரடியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு திடீர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அங்குள்ள நிலவரங்களை நேரில் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுடனும் வைத்தியசாலை நிர்வாகத்தினருடனும் அவர்கள் இது குறித்து தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளரின் இந்த தன்னிச்சையான செயற்பாடு குறித்து உரிய உயர் மட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய தருணம்
இலங்கையில் நல்லாட்சி, சமத்துவம் மற்றும் அனைத்துச் சமூகங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படுவதாக அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், களத்தில் உள்ள கீழ்மட்ட நிர்வாக மட்டங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வது சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளில் இது போன்ற முட்டுக்கட்டைகள் போடப்படுவது அவர்களின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, அரச துறை சேவைகளில் அவர்கள் இணைவதிலிருந்தும் பின்வாங்கச் செய்யும்.
எனவே, சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார திணைக்களம் உடனடியாக இதில் தலையிட்டு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள இந்த அடக்குமுறைச் செயலுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அரச சுற்றுநிருபங்களை மீறி செயற்படும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், இந்த விவகாரம் பாரிய மக்கள் எழுச்சியாக வெடிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
KVC Media செய்திப் பிரிவு: இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் நம்பகத்தன்மை வாய்ந்த குரலாக ஒலிக்கின்ற KVC Media, எமது சமூகத்தின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பான உண்மையான செய்திகளைத் தொடர்ந்து வெளிக்கொண்டுவரும்.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

