குச்சவெளி:
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்ன ஆளங்குளம் மற்றும் கல்லம்பத்தை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு எதிராக, விவசாயிகள் குச்சவெளி பிரதேச செயலகத்தில் முறைப்பாடு ஒன்றைக் கையளித்துள்ளனர்.

குறித்த பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்குள் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து, மரக்கன்றுகளை நடுவதற்கான காணி அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த காணிகளுக்கான உரிமை ஆவணங்கள் 1970 முதல் 1981 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகவும், சில காணிகளுக்கு ஏக்கர் கணக்கிலான ஆவணங்கள் இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு
இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று விவசாய சமாதான நிலையத்தின் தலைவர் உள்ளிட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து குச்சவெளி பிரதேச செயலாளரைச் சந்தித்து, குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.

எனினும், பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகிய இருவரும் விடுமுறையில் இருந்தமையால், அங்கிருந்த பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த அதிகாரிகள் பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விவசாயிகளின் முறைப்பாடு தொடர்பில் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் மிக விரைவில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமது விவசாய நிலங்களைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



KVC Media | மக்கள் குரல்

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

