img 3291

நூல் திறனாய்வு :ஆர்.சதாத் (வளவாளர் – தமிழ்)
வலயக்கல்வி அலுவலகம், கிண்ணியா.

அறிமுகம்

நூலாசிரியர்: பாவலர் கிண்ணியா சபீனா (சித்தி சபீனா வைத்துல்லாஹ்)

வெளியீடு: பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம்.

தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தலையாயதாக விளங்குவதற்கு அதன் தொன்மையும் தொடர்ச்சியும் மட்டுமல்ல, அம்மொழி தன்னுள் கொண்டமைத்துள்ள பேரிலக்கணக் கட்டமைப்புமே முதன்மையான காரணமாகும். “எழுத்து உணர்ந்தாலன்றிச் சொல் உணரலாகாது. சொல் உணர்ந்தாலன்றிப் பொருள் உணரலாகாது” என்ற மரபுக்கு ஏற்ப, தமிழின் கவித்துவ மரபையும் செய்யுள் வடிவமைப்பையும் காலந்தோறும் நிலைநிறுத்தி வருவது யாப்பிலக்கணம் ஆகும்.

‘தொல்காப்பியம்’ தொடங்கி அமிர்தசாகரரின் ‘யாப்பருங்கலக் காரிகை’, பவணந்தியாரின் ‘நன்னூல்’ வரை வளர்ந்து வந்த இச்செய்யுள் இலக்கண மரபு. நவீன காலத்தில் எளிய வாசகனுக்கும், புதிய கவிஞர்களுக்கும், பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சென்றடைவதில் சில தடங்கல்கள் நிலவி வந்தன. அக்குறையைப் போக்கி,மரபுக் கவிதையின் வாசல்களையும் நுட்பங்களையும் திறந்துகாட்டும் ஒரு மாபெரும் திறவுகோலாக அமைந்திருக்கின்றது பாவலர் கிண்ணியா சபீனா (சித்தி சபீனா வைத்துல்லாஹ்) அவர்களால் ஆக்கப்பட்ட 216 பக்கங்களைக் கொண்ட “மரபிலக்கணக் களஞ்சியம்” என்னும் இந்நூல் எனலாம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், இலக்கியச் செழுமைமிக்க கிண்ணியா மண்ணிலிருந்து உதித்த பாவலர் கிண்ணியா சபீனா அவர்கள், தமிழ் செய்யுள் இலக்கணத்தில் ஆழ்ந்த புலமையும் நுட்பமான பயிற்சியும் பெற்றவர். அவரது இந்த ஆக்கப்பணியைக் கௌரவிக்கும் வகையில், இலங்கைக் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்நூலை மிகச் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. ஒரு அரசு திணைக்களத்தின் பண்பாட்டுப் பிரிவால் வெளியீடு செய்யப்பட்டிருப்பது, இந்நூலின் நம்பகத்தன்மைக்கும், கல்விசார் தரத்திற்கும், வரலாற்று முக்கியத்துவத்திற்கும் கிடைத்த சான்றாகும். 216 பக்கங்களில் பரந்து விரிந்துள்ள இந்நூல், யாப்பிலக்கணத்தின் அத்தனை அலகுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள ஒரு பேராலயமாக மிளிர்கிறது.

நூலின் கட்டமைப்பும் உள்ளடக்கப் பகுப்பாய்வும்

“மரபிலக்கணக் களஞ்சியம் “எனும் இப்பேரேடு மொத்தம் 41 பிரதான தலைப்புகளில் யாப்பிலக்கணத்தின் அத்தனை நுட்பங்களையும் மிகத் துல்லியமாக வரிசைப்படுத்தியுள்ளது. நூலின் பொருளடக்கம், மரபுக் கவிதையின் அஸ்திவாரத்தில் தொடங்கி அதன் உச்சகட்ட வடிவம் வரை படிமுறை வளர்ச்சியை அழகாகக் காட்டுகிறது. இதனை பின்வரும் அட்டவணையில் காட்டலாம்.

‘மரபிலக்கணக் களஞ்சியம்’ – உள்ளடக்கப் பகுப்பாய்வு அட்டவணை (Chart)

இயல் / பகுதி
பொருளடக்கத் தலைப்புகள் (மாதிரி)
இலக்கண உள்ளடக்கம் & நோக்கம்

1 – 2. அறிமுகப் பகுதி அறிமுகம், யாப்பியலும் யாப்பருங்கலக் காரிகையும், நாமும் யாப்பிலக்கணமும் காரிகையின் வரலாற்றுப் பின்னணி, தற்காலத்தில் மரபிலக்கணத்தின் அவசியத்தையும் பயன்பாட்டையும் விளக்குதல்.

3 – 8. யாப்பின் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை செய்யுள் அமைப்பிற்குத் தேவையான 6 உறுப்புகளின் இலக்கண விதிகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் விவரித்தல்.

9 – 19. தொடை நயங்கள் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை, வருக்க மோனை / வருக்க எதுகை செய்யுளுக்கு அழகூட்டும் 11 வகையான தொடை நயங்களையும், வருக்க வேறுபாடுகளையும் சான்றுகளுடன் விளக்குதல்.

20 – 35. பாவகைகளும் இனங்களும் செய்யுளியல், மரபுப் பாக்களும் ஓசையும், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் அவற்றின் இனங்கள் நால்வகைப் பாக்கள் (அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் ஓசைகள்), தாழிசை, துறை, விருத்தம் மற்றும் கட்டளைக் கலித்துறை.

36 – 39. இசைப் பாக்கள் இசைப் பாக்கள், கும்மி, சிந்து, கண்ணிப் பாடல்கள் செவ்வியல் யாப்பிலிருந்து நாட்டுப்புற இசை வடிவம் வரையிலான வடிவங்களை இலக்கணப்படுத்துதல்.

40 – 41. முடிவுரை முடிவுரை, உசாத்துணை ஆய்வின் தொகுக் கூற்றும், பயன்படுத்தப்பட்ட முதன்மை நூல்களின் வரிசையும்.

யாப்பிலக்கண உறுப்புகளை விளக்கும் முறை

நூலாசிரியர், செய்யுளின் அடிப்படை உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றை விளக்கும் போது கடைப்பிடித்துள்ள தெளிவு பாராட்டத்தக்கது. எழுத்தும் அசையும் குறில், நெடில், மெய், ஆய்தம் மற்றும் குற்றியலுகரம் போன்றவை எவ்வாறு அசை பிரித்தலுக்குப் பயன்படுகின்றன என்பதை ஆசிரியர் மிக எளிய உதாரணங்கள் மூலம் கற்பிக்கிறார். “நேரசை” மற்றும் “நிரையசை” ஆகியவற்றை இனங்காண்பதில் புதியவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை மிகத் தெளிவான சூத்திரங்கள் மூலம் போக்கியுள்ளார்.

உதாரணமாக:
நிரையசையைப் பின்வருமாறு உதாரணங்களுடன், நினைவிற் கொள்வோம்.

  1. குறில் இணைந்து வருவது கொடி
  2. குறில் இணைந்து ஒற்றெழுத்துடன் வருவது -குடம்
  3. குறில் நெடில் வருவது சுறா
  4. குறில் நெடில் ஒற்றெழுத்துடன் வருவது- இறால்

சீரும் தளையும் ஓரசைச்சீர் முதல் நாலசைச் சீர் வரையிலான அசைச்சேர்க்கைகளையும், “இயற்சீர்வ வெண்டளை, “வெண்சீர் வெண்டளை”, “ஆசிரியத்தளை”, “கலித்தளை”, “வஞ்சித்தளை” போன்ற தளையமைப்புகளையும் மிகவும் இயல்பாக விளக்கியுள்ளார். “தட்டினால் தட்டாத ஓசை” எனும் செய்யுள் தத்துவத்தை நூலாசிரியர் தனது விளக்கவுரைகளில் அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.

நூலின் முதன்மையான தொடை நயப் பாகுபாடுகள்

செய்யுளின் ஓசை இன்பத்திற்கும் அழகிற்கும் உயிரூட்டும் தொடை விகற்பங்களை ஆசிரியர் மிக விரிவாக அலசியுள்ளார்.
மோனைத் தொடை, அடிமோனை மற்றும் ஏனைச் சீர் மோனைகளான இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று மோனைகள்.
எதுகைத் தொடை, அடி எதுகை, சீர் எதுகைகளுடன் அல்லாமல், வருக்க எதுகை மற்றும் வருக்க மோனை, எனும் நுட்பமான எழுத்துவகை அலங்காரங்கள். இந்நூலில் மலிந்து விரவிக் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக வருக்கமோனையில் அமைந்த பாடல்

(ம)கிழ்ச்சி பொங்கும் வாழ்வினைப் பெற்றிட
(மா)ந்தரின் உணர்வினை மதித்தே நடப்பாய்
(மி)ன்மினி போலவே நாளும் ஒளிர்ந்திட,
(மீ)ட்டுவாய் நற்குணம் மண்ணில் மாண்புடனே!
(மு)க்கனி சக்கரை இணைவுடன் அருந்தி,”
(மூ)ப்பிலா அழகுடன் வசந்தமாய் வாழ்வாய்.
மென்மை மிகுந்த மொழியினைப் பகிர்ந்திடு!
(மே)தினி மீதினில் (மே)ன்மை காண்பாய்!”
(மை)யல் கொண்டிடு ஆத்மீகச் செயல்களில்,
மொய்த்திடு முந்தன் மனதினில் நிம்மதியே!
(மோ)ட்சமும் கிடைத்திடும் மறுமை வாழ்வினிலே!
(மௌ)னமும் தியானமும் மனவலியின் மாமருந்தாம்!
(கிண்ணியா சபீனா)

அந்தாதித் தொடை இரட்டைத் தொடை பாடலின் இறுதிச் சொல் அல்லது எழுத்து அடுத்த பாடலின் தொடக்கமாக வரும் அந்தாதி முறையும், ஒரே சொல் மீண்டு மீண்டு வரும் இரட்டைத் தொடையும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக திருக்குறள் ஒன்றினை சான்று காட்டி அளபெடைத் தொடையை நுாலாசிரியர் காட்டும் விதம் வழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் பதித்துவிடுகிறார். ஆசிரியர்.

“ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர்”

இந்தத் திருக்குறளிலே முதற் சீரிலே முதல் எழுத்து அளபெடுத்து வந்துள்ளது! செய்யுள்களுக்கு ஓசை நயம் கொடுக்கின்றது!

இவ்வாறு. சேய்யுளிலே எந்தச் சீரின் எந்த எழுத்து அளபெடுத்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்! சேய்யுளிலே ஓசை குறையும் பொழுது. ஆந்த ஓசையை செய்ய சீர்களில் நிறைவு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்ற உயிர் நெடில் எழுத்துக்கள் ஏழம் தம் இனமாகிய குறில் எழுத்துக்களை பெற்று, உரிய மாத்திரையில் இருந்து நீண்டு ஒலிப்பதுண்டு.

பாவகைகளின் முழமையான வீச்சு

நூலின் நடுநாயகமாக விளங்குவது நால்வகைப் பாக்கள் பற்றிய விளக்கங்களாகும். ஆசிரியப்பா (அகவற்பா), வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றின் இலக்கணங்களை மட்டும் கூறாமல், அவற்றின் இனங்களான தாழிசை, துறை, விருத்தம் என்பவற்றையும் மிக விரிவாக 20 முதல் 35 வரையிலான தலைப்புகளில் ஆசிரியர் கையாண்டுள்ளார்.

“வெண்பா ஈற்றடி முச்சீராய் ஏனை அடிகள் நாற்சீராகி, இயற்சீர் வெண்டளையுள் வெண்சீர் வெண்டளையுமே பெற்று, செப்பலோசை கொண்டு வருவது…”

என்ற மரபு விதியை விளக்குவதோடு மட்டுமல்லாமல், “கட்டளைக் கலித்துறை” மற்றும் “கலிவிருத்தம் ” போன்ற கடினமான யாப்பு வடிவங்களை எவ்வாறு பிழையின்றி இயற்றுவது என்பதற்கான வழிகாட்டல்களையும் ஆசிரியர் இதில் வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.

நாட்டுப்புற இலக்கிய வடிவங்களின் இலக்கண மேன்மையைக் காட்டும் விதம்

பொதுவாக மரபிலக்கண நூல்கள் செவ்வியல் பாக்களோடு தங்கள் எல்லையை முடித்துக் கொள்ளும். ஆனால், பாவலர் கிண்ணியா சபீனா அவர்கள், மக்கள் வழக்கில் உள்ள கும்மிப் பாடல்கள், சிந்துப் பாடல்கள் (காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து), கண்ணிப் பாடல்கள் மற்றும் இசைப் பாக்கள் ஆகியவற்றையும் நூலின் 36 முதல் 39 வரையிலான தலைப்புகளில் கொண்டுவந்து சேர்த்துப் புதியதொரு பரிமாணத்தைக் காட்டியுள்ளார். நாட்டுப்புறவியல் வடிவங்களுக்கும் யாப்பியல் ரீதியான இலக்கணக் கட்டமைப்பு உண்டு என்பதை நிரூபித்திருப்பது இந்நூலின் தனித்துவமான சாதனையாகும்.

சிந்துப் பாடல் ஒன்றுக்கு பரிட்சையமான பாரதி பாடலை ஆதாரங்காட்டி எமக்கு விளக்கித்தரும் விதம் போற்றத்தக்கது.

ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

இப்பாடல் சிந்தடியாலும் தனிச்சொல் கொண்டும் இயற்றப்பட்டது. இந்தச் சிந்து முச்சீர் இரட்டை எனப்படும். அடிகளில் சம அளவுச் சீர் கொண்டு அமையும் சிந்துப் பாடல்கள் சமநிலைச் சிந்து எனப்படும். இரண்டு அடிகளிலும் சமமற்றச் சீர்களைக் கொண்டு அமையும் சிந்து பாடல் வியனிலை சிந்து என்று கூறப்படும் எனக்காட்டும் விதம் சிறப்பு.

இலக்கிய நயமும் நடை அழகும்

“இலக்கணம் என்றாலே வறண்டது. கடினமானது” என்ற பொதுவான பிம்பத்தை இந்நூல் தகர்த்தெறிகிறது. ஆசிரியரின் நடை எளிய தமிழும், கவித்துவ நயமும் கலந்த ஒன்றாகும். நூலில் எடுத்தாளப்பட்டுள்ள உதாரணப் பாடல்கள் சங்க இலக்கியங்கள், காரிகை உரைகள் மற்றும் நூலாசிரியரின் சொந்த மரபுக் கவிதைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால் வாசகருக்கு இலக்கண விதியும் விளங்கும், கூடவே கவிதை நயமும் அநுபவமாகும். இதற்கு சிறந்த உதாரணம்

வியந்திட வளர்ந்திடும் விருட்சமும் மலைகளும்
நயந்தொட வளமிடும் நதிகளின் எழிலதும்
வயலினிற் குலுங்கிடும் மணமுடை மணிகளும்
இயற்கையாள் வழங்கிய இனிமைகொள் வரங்களே.
(கிண்ணியா சபீனா)

திறனாய்வுச் சுருக்கம்

*216 பக்கங்களில் மரபிலக்கணத்தின் முழுமையான வரைபடத்தை வழங்கியிருப்பது.

  • தொல்காப்பியம் மற்றும் யாப்பருங்கலக் காரிகையின் கடினமான சூத்திரங்களை தற்கால மொழியில் எளிமைப்படுத்தியமை.
  • பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மரபுக்கவிதை எழுத விரும்பும் புதிய கவிஞர்களுக்கு ஒரு முழுமையான வழாட்டியாக அமைவது.
  • இசைப்பாக்கள் மற்றும் சிந்து வடிவங்களை இலக்கண வரம்பிற்குள் கொண்டு வந்தமை பாராட்டுக்குரியது.

சிறிய ஆலோசனை

எதிர்காலப் பதிப்புகளில், அசை பிரித்தல் மற்றும் தளை தட்டுதலுக்கு மேலும் சில காட்சிப் படங்கள் (Charts & Diagrams) சேர்த்தால் மரபை விரும்பும் ஆரம்பநிலை வாசகர்களுக்கு மேலும் ஏதுவாக இருக்கும்.

தற்காலச் சூழலுக்கு இந்நூலின் பொருத்தப்பாடு (Relevance in Modern Era)

நவீன டிஜிட்டல் உலகில் கவிதைகள் புதுக்கவிதை, ஹைகூ, காட்சிப்பாக்களாக உருமாறி வரும் நிலையில், மரபிலக்கணத்தின் அவசியமும் இந்நூலின் பொருத்தப்பாடும் பல நிலைகளில் முதன்மை பெறுகின்றன.

மரபுவழித் தமிழின் அஸ்திவாரம்: புதுக்கவிதை வடிவங்கள் நவீன உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், மொழியின் கட்டுக்கோப்பும் ஓசை நயமும் சிதையாமல் இருக்க மரபிலக்கண அறிவு இன்றியமையாதது. “மரபிலக்கணக் களஞ்சியம்” கடினமான யாப்பருங்கலக் காரிகைச் சூத்திரங்களை எளிய தமிழில் வழங்குவதால் தற்கால வாசகர்களுக்கு ஏற்றது.

இசை மற்றும் பாடலாசிரியர்களுக்கான கையேடு: தற்காலத் திரைப்பாடல்கள், சுயாதீன இசைப் பாடல்கள் (Independent Music) மற்றும் பாடல்களுக்கான சந்த அமைப்புகளுக்கு வெண்பா, கலிப்பா, விருத்தம் மற்றும் சிந்துப் பாடல்களின் (காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து) ஓசையியல் அறிவு அவசியம். இந்நூல் செவ்வியல் யாப்போடு இசைப்பாக்களையும் விளக்குவதால் இன்றைய பாடலாசிரியர்களுக்குச் சிறந்த வழாட்டியாகும்.

இளங்கவிஞர்களுக்கான வழிகாட்டி:கவிதையார்வம், சிறுவர்பாடலாக்கம். ஆய்வாளர்கள் போன்றவர்களுக்கு யாப்பிலக்கணம் தொடர்பான அறிவு முக்கிய பங்கு வகிக்கின்றன.41 தலைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நூல் இவர்களுக்குத் தெளிவான கருத்தியல் விளக்கங்களை வழங்குகிறது.

தற்காலத்தில் இந்நூலின் பயன்பாட்டை அமைப்பதற்கான வழிகாட்டல்கள்

  • பாடசாலை மற்றும் கல்லூரி,பல்கலைக்கழக நிலைகளில் தமிழ் மன்றங்கள் மற்றும் கல்லூரித் தமிழ்த் துறைகளில் மரபுக் கவிதை பயிற்சிப் பட்டறைகளுக்கு (Workshops) இந்நூலை முதன்மைப் பாடநூலாகக் கையாளலாம். இதன் மூலம் மாணவர்களிடையே அசை பிரித்தல், தளை தட்டுதல் மற்றும் சீர் அமைத்தல் போன்ற பயிற்சிகள் எளிமையடையும்.
  • இளங்கவிஞர்கள் / புதிய படைப்பாளிகள் புதுக்கவிதை எழுதும் இளைய தலைமுறையினர் மரபுக் கவிதையின் ஓசை நயத்தைக் கற்றுக்கொள்ள தினசரி வழிகாட்டிப் புத்தகமாகப் பயன்படுத்தலாம்.
  • டிஜிட்டல் வடிவாக்கம் (Digitalization)
    இந்நூலின் 41 தலைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு குறுஞ்செயலிகள் (Apps), வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் காணொளிக் கற்றல் தொகுப்புகளை உருவாக்கலாம்.
  • ஆராய்ச்சியாளர்கள்/திறனாய்வாளர்கள்,** நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இசை வடிவம் சார்ந்த ஆய்வுகளில் (சிந்து,கண்ணி, கும்மி) இந்நூலின் 36-39 இயல்களை ஒப்பீட்டு ஆய்வுக்குப் பயன்படுத்தலாம்.
  • எதிர்காலப் பதிப்புகளில் ஒவ்வொரு இயலின் முடிவிலும் பயிற்சி வினாக்கள் மற்றும் “அசை பிரித்துப் பார்க்க இடைவெளி வழங்குவது ஆரம்ப நிலை கற்போருக்கு உதவும்.
  • ஒலி வடிவம் (Audiobook/Podcasts) அகவலோசை, செப்பலோசை, துள்ளலோசை, தூங்கலோசை போன்ற ஓசை நயங்களை வாசகர்கள் கேட்டு உணரும் வகையில் குரல் வழி ஆடியோ விளக்கங்களை உருவாக்கலாம்.
  • பாடசாலை பாடத்திட்ட இணைப்புக்கு கல்வித் வெளியீட்டுத் திணைக்களங்கள் இந்நூலைப் பாடசாலை நூலகங்களுக்கும், தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் துணைக் கையேடாகவும் உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைக்கலாம்.

முடிவுரை

    பாவலர் கிண்ணியா சபீனா அவர்களின் “மரபிலக்கணக் களஞ்சியம்” தமிழ் இலக்கண உலகில் ஒரு மைல்கல் என்பதில் ஐயமில்லை. அழிந்துவரும் மரபுக் கவிதை வடிவங்களை மீட்டெடுக்கவும், தமிழ் செய்யுள் நுட்பங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் இந்நூல் பெரும் பாலமாகச் செயல்படுகின்றது. 216 பக்கங்களில் அடங்கியுள்ள இக்களஞ்சியம், ஒவ்வொரு தமிழ்ப் பிரியரின் வீட்டு நூலகத்திலும், பாடசாலை, பல்கலைக் கழகங்களிலும் பொது நூலகங்களிலும் தவறாது இடம்பெறவேண்டிய ஒரு தகுதியான பேரேடாகும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *