Breaking NewsLatestTOP STORIESWorld

ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் விதித்த புதிய கடுமையான நிபந்தனைகள்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அமைதி உடன்படிக்கையின் வரைவு திட்டத்தில் (Peace Framework Blueprint), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீர் மாற்றங்களைச் செய்துள்ளார். ஈரானுக்கு சாதகமாக அமையக்கூடிய சில சரத்துக்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக மிகவும் கடுமையான புதிய நிபந்தனைகளை அவர் உள்ளடக்கியுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் அவசரநிலை ஆலோசனை அறையில் (Situation Room) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மூத்த ஆலோசகர்கள் மற்றும் அமைச்சரவை அதிகாரிகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய உயர் மட்ட தீவிர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த புதிய அமைதி உடன்படிக்கை கட்டமைப்பு தற்போது பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச இடைத்தரகர்கள் மூலம் ஈரானின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள் என்னென்ன?

அமெரிக்க ஊடகங்களின் முதற்கட்டத் தகவல்களின்படி, முன்னதாக பராக் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் போது ஈரானின் முடக்கப்பட்ட நிதி விடுவிக்கப்பட்டது போன்ற ஒரு சரத்து தற்போதைய வரைவு அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஈரானின் நிதியை விடுவிப்பது அல்லது பொருளாதாரத் தடைகளை தளர்த்துவது போன்ற தற்போதைய முடிவுகள் ஈரானுக்கு சாதகமாக அமைந்துவிடும் என டிரம்ப் கருதுகிறார்.  

அமெரிக்க தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்:

 அணு ஆயுதத் தடை: ஈரான் எக்காரணம் கொண்டும் அணு ஆயுதங்களை அல்லது அணு குண்டுகளைத் தயாரிக்கக் கூடாது என்பதற்கான முழுமையான மற்றும் உறுதியான உத்தரவாதம்.

 ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) திறப்பு: சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையை ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக முழுமையாகத் திறக்க வேண்டும். இப்பாதையை எந்தவொரு தனி நாடும் கட்டுப்படுத்தக் கூடாது.  

ஈரானின் தற்போதைய எதிர்வினை மற்றும் உலக நாடுகளின் எதிர்பார்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த புதிய நிபந்தனைகள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் (Esmail Baghaei) கருத்துத் தெரிவிக்கையில், “ஈரான் ‘கட்டாயம்’ (Must) என்ற மிரட்டல் தொனியிலான மொழியை 47 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரித்துவிட்டது. மேற்கத்திய நாடுகள் எதுவும் எங்களிடம் இத்தகைய தொனியில் பேச முடியாது. ஈரான் தனது சொந்த நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு இப்போர் வெடித்தது. ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், ஜனாதிபதி டிரம்பின் இந்த புதிய நிபந்தனைகள் காரணமாக அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.