லத்தீப் பாரூக்
காசாவில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவிய ஒரு யுத்தக் குற்றவாளி என அழைக்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2026 ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று ஹமாஸ் மீது திணிக்கப்பட்ட 15 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸை நிராயுதபாணியாக்குவதற்கான ஓர் உடன்பாட்டை எட்டியதாக அறிவித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அரபு சர்வாதிகாரிகளின் துணையோடு பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரித்த “போர்க்குற்றவாளிகளை உள்ளடக்கிய சமாதான சபை” ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் படிப்படியாக ஆயுதக் குறைப்பு, ஆட்சி மாற்றம் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தை மீளப் பெறுதல் என்பன அடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக முழுப் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அழிவுகளை ஏற்படுத்திய பல யுத்தங்கள், படுகொலைகள் மற்றும் அழிவுகளுக்கு மூல காரணமாக விளங்கிய இஸ்ரேலை நிராயுதபாணியாக்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ட்ரம்பின் வெட்கக்கேடான இந்த நடவடிக்கைகள் மீது அவருக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் தவிடுபொடியாக்கும் வகையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளார். இத்தனைக்கும் நெதன்யாகுவும் சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.
“நான் பிரதமராக இருக்கும் வரை, காசாவிலோ அல்லது யூதேயா மற்றும் சமாரியாவிலோ, மேற்குக் கரையிலோ பைபிளின் பெயரைப் பயன்படுத்தி ஒரு பலஸ்தீன அரசு நிறுவப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” என்று நெதன்யாகு அறிவித்துள்ளார்.
“நான் இங்கே மிகத் தெளிவாக இருக்க விரும்புகின்றேன். 15 அம்சங்களைக் கொண்ட ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கின்றது. ‘நான் இதுபற்றி எதுவும் சொல்லவில்லையே என்று மக்களாகிய நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. அதனால் நான் அதை மீண்டும் சொல்கின்றேன். இஸ்ரேல் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள 15 அம்ச ஆவணத்தை நிராகரிக்கின்றது.’
“ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும் வரை ஐ.டி.எஃப் எந்த வகையிலும் திரும்பப் பெறப்பட மாட்டாது. மேலும், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல் என்று நான் கூறும்போது, அது கனரக ஆயுதங்கள், வலு குறைந்த கனரக ஆயுதங்கள் என அனைத்து ஆயுதங்களும் உண்மையாகக் களையப்பட வேண்டும். அவ்வாறான ஒரு உண்மையான ஆயுதக் களைவு அன்றி போலியான ஓர் ஆயுதக் களைவை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் நெதன்யாகு கூறியுள்ளார்.
“அவர்கள் (அமெரிக்கர்கள்) பல யோசனைகளைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில எங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. சில எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை எவ்வாறு வலியுறுத்துவது என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
நெதன்யாகு மட்டுமல்ல, இப்போது தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனும், இன்றைய ஜனாதிபதி ட்ரம்பும் கூட, பலஸ்தீன மக்களின் இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளவர்கள். ஏனெனில், பிடன் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் முழு ஆதரவுடன்தான் காசாவில் நெதன்யாகு இனப்படுகொலைகளை செய்துள்ளார். இன்றும் செய்து வருகின்றார்.
பிரபல கட்டுரையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ், காசாவுக்கான ட்ரம்பின் சமாதானத் திட்டம் ஒரு கானல்நீர், அது ஒரு மாயாஜாலம் என்று வர்ணித்துள்ளார். இஸ்ரேல் பலஸ்தீன நிலங்களை அதிகமாகக் கைப்பற்றி, அதன் இனப்படுகொலையை ஓரளவு முடித்துக்கொள்ள நினைப்பதால், சமாதானம் என்பது ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்படும் ஒரு தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் தற்போது யுத்த நிறுத்தம் இல்லை. நடைமுறையில் செயல்படும் ஒரு “சமாதான சபையும்” அங்கு இல்லை. பலஸ்தீன அரசை உருவாக்குவதற்கான திட்டங்கள் எதுவும் அங்கு இல்லை. இனப்படுகொலை அல்லது அதற்கான பொறிமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டங்கள் எதுவும் அங்கு இல்லை.
“காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் விரிவான திட்டத்தின்” எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளவோ, செயல்படுத்தவோ அல்லது கடைப்பிடிக்கவோ இஸ்ரேல் தயாராக இல்லை. அதை முற்றாக மறுத்துவிட்டது. இஸ்ரேல் இனி அவர்களை மதிக்கப் போவதும் இல்லை. இனப்படுகொலை மட்டுமே அங்கு இன்னமும் எஞ்சி உள்ளது. இது வடிவத்தையும் தீவிரத்தையும் அவ்வப்போது மாற்றுகின்றது. ஆனால் அதன் மூலாதாரத் தன்மைகள் ஒருபோதும் மாறப் போவதில்லை.
ட்ரம்பின் திட்டம் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்படவில்லை. இது பலஸ்தீனர்களுக்கு சமமான தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்படவில்லை. இது தற்போது நடைபெற்று வரும் பெரிய அளவிலான படுகொலைகளைத் தடுக்க வடிவமைக்கப்படவும் இல்லை. மாறாக, சியோனிச கனவின் உச்சகட்டமாக இஸ்ரேல் மேற்கொண்டு வந்த பலஸ்தீனர்கள் மீதான அதன் இனப்படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், தப்பிப்பிழைத்த பலஸ்தீன மக்களை தங்கள் தாயகத்திலிருந்து மீண்டும் விரட்டவுமே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். மேலும், எதிர்கால அரசின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று பலஸ்தீனர்கள் வலியுறுத்தும் பிராந்தியத்திலிருந்து இஸ்ரேல் முற்றாகப் பின்வாங்க வேண்டும். இவை நடந்தால் மட்டுமே ஆயுதங்களைக் களைவோம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
ஹமாஸ் தங்கள் நிலங்களை இஸ்ரேலிடமிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடி வருகின்றது. எவ்வாறாயினும், சமாதானத்துக்கான வரைபடத்தை அமுல் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் ஹமாஸ் மீண்டும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் முழுமையாக தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.
முரண்பாடு என்னவென்றால், 1948 இல் டெய்ர் யாசினில் பலஸ்தீன மக்கள் மீதான படுகொலைகள் தொடங்கியது முதல், காசாவில் தற்போது நடந்து வரும் இனப்படுகொலைகள் வரை, பலஸ்தீனர்களை படுகொலை செய்தவர்களையும், இனப்படுகொலை செய்தவர்களையும் இஸ்ரேல்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளினதும், இன்னும் உள்ள அரபுலக சர்வாதிகார ஆட்சியாளர்களினதும் ஆதரவுடன் இஸ்ரேல் இந்தச் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது பங்கைச் செம்மையாக நிறைவேற்றி வருகின்றது.
காசாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் நிலைமை தற்போது மேலும் மோசமடைந்து, 2023 அக்டோபர் 7 முதல் இந்தப் பகுதியை ஒரு பலிபீடமாக மாற்றியுள்ளது. காசாவை அபிவிருத்தி செய்வதற்கான ட்ரம்பின் சமாதான சபை என்று அழைக்கப்படுவது, இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு கண்துடைப்பு தந்திரமாகும். இதன் மூலம் பலஸ்தீன மக்களுக்கு தங்கள் சொந்த நிலங்களில் வாழும் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன என்பதே யதார்த்தமாகும்.
அரபு சர்வாதிகாரிகள், சர்வதேச சமூகம் மற்றும் தங்களது சொந்த தலைமைகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் பலஸ்தீன மக்களில் பலர், 75 ஆண்டுகளுக்கும் மேலான போர், துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து ஏதோ ஒரு வகையில் தப்பிப் பிழைத்து வாழுகின்றனர்.
தங்களுக்கு ஆதரவாக ஏராளமான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் இருந்த போதிலும், அந்த மக்கள் முன்னரை விட தற்போது தங்கள் தாயகத்திலிருந்து இனரீதியாகத் துடைத்து எறிய முற்படும் ஓர் இனப்படுகொலை நடவடிக்கைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
ஒரு பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தால் அவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் எழுந்து நின்று போராடுவதைத் தவிர பலஸ்தீனர்களுக்கு வேறு தெரிவுகளும் இல்லாமல் இல்லை.
14 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட பலஸ்தீன மக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்துக்கும் புலம்பெயர்ந்த பலஸ்தீனர்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட பாதியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பலஸ்தீன மக்கள் அரசியல் வரைபடத்திலிருந்து மறைந்துவிடவோ அல்லது அவர்களை மறைத்து விடவோ வாய்ப்பில்லை.
அவர்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பலஸ்தீனர்கள் தங்கள் தேசிய உரிமைகளை அடைவதற்கான சிறந்த வழி, இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான அந்த மக்களின் நீடித்த எதிர்ப்பே ஆகும். இந்த விடயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ள அவர்களுக்கான சர்வதேச ஒற்றுமை மற்றும் மக்கள் ஆதரவு என்பவற்றிலிருந்து அவர்கள் பயனடைந்து கொள்ளலாம்.
இதற்கிடையில், பல ஆண்டுகளாக யசர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை அமைப்பான பி.எல்.ஓ. ஒரு ஓரங்க நாடகமாக மாறியுள்ளது. பரந்த அளவிலான நிதி ஊழல், உறவினர்களுக்கான ஆதரவு, இஸ்ரேலையும் அதன் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவாளர்கள் மற்றும் அரபு சர்வாதிகாரிகளையும் மகிழ்விக்க பலஸ்தீன மக்களின் உரிமைகளில் சமரசம் செய்ததாக அரபாத் மீது பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அரபாத் மற்றும் அவரது பி.எல்.ஓ.வின் நடவடிக்கைகளால் விரக்தியும் சோர்வும் அடைந்திருந்த பலஸ்தீன மக்கள் மத்தியில் பரவலான மதிப்பைப் பெற்றிருந்த ஷேக் அகமது யாசின், 1987 டிசம்பரில் பலஸ்தீன சுதந்திர இயக்கமான ஹமாஸை நிறுவினார். இது முதல் இன்திபாதா (இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் பலஸ்தீன எழுச்சி) வெடித்தபோது, எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஒரு கிளையாகக் கருதப்பட்டது.
அதன் பிரதான பாதை இஸ்ரேலுக்கு எதிரான வன்முறை கலந்த போராட்டம், பத்தா இயக்கத்துடனான அரசியல் போட்டி மற்றும் காசா பகுதியின் ஆட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. கொள்ளையடிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் இருப்பதை அது வன்முறையோடு நிராகரிக்கின்றது.
ஒரு வருடம் கழித்து ஹமாஸ் தனது முதலாவது சாசனத்தை வெளியிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க பலஸ்தீனத்தில் ஓர் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும், இஸ்ரேலை அழிப்பதற்கும் ஹமாஸ் அழைப்பு விடுத்தது. பலஸ்தீனம் ஓர் இஸ்லாமிய தாயகம் என்றும், அதை ஒருபோதும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும், இஸ்ரேலிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்டு அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்த புனிதப் போரை நடத்துவது பலஸ்தீன முஸ்லிம்களின் மதக் கடமையாகும் என்றும் ஹமாஸ் சாசனம் வலியுறுத்திக் கூறியது.
இந்த நிலைப்பாடு ஹமாஸை, 1988 இல் இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை அங்கீகரித்திருந்த பலஸ்தீன விடுதலை அமைப்புடன் மோதிக் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தது. ஹமாஸ் இஸ்ரேலிய வீரர்களுக்கு எதிரான தனது முதலாவது தாக்குதல்களை 1989 ஆம் ஆண்டில் நடத்தியது. இதன் விளைவாக இஸ்ரேல் ஹமாஸ் மீது ஒரு தற்காலிக ஒடுக்குமுறையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது ஹமாஸ் நிறுவுனர் ஷேக் அகமது யாசின் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
1990களில் ஒஸ்லோ உடன்படிக்கைகளையும், இஸ்ரேலுக்கும் மதச்சார்பற்ற பலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் (பி.எல்.ஓ.) இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் ஹமாஸ் எதிர்த்தது. 1993க்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடையில் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ஏராளமான உயர்மட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியது. இதன் விளைவாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்தன.
2006 ஆம் ஆண்டில் பலஸ்தீன சட்டமன்ற சபைக்கான தேர்தலில் ஹமாஸ் பங்கேற்றது. இந்தத் தேர்தலில் பத்தாஹ் இயக்கத்தை எதிர்த்து ஹமாஸ் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றது. ஹமாஸ் 2007 ஆம் ஆண்டில் காசா பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. 2008 ஆம் ஆண்டில் அது இஸ்ரேலை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் அதற்கு இராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தது.
2012 முதல் 2021 வரை ஹமாஸும் இஸ்ரேலும் குறிப்பிடத்தக்க விதத்தில் பல மோதல்களில் ஈடுபட்டன.
“ஹமாஸ் இதுவரை நிறைய இராணுவ பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இருந்தாலும் அது இன்னும் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும் ஆற்றலையும் திறனையும் கொண்டுள்ளது. மேலும் அது தனது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொண்டும் உள்ளது” என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் யுத்த ஆய்வுகள் துறையின் ஆராய்ச்சியாளரான மெரினா மைரோன் கூறியுள்ளார்.
காசாவின் குறுகிய கடலோரப் பகுதிக்குள், இஸ்ரேலிய படைகளால் தற்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத் தெரிவுகளே உள்ளன. அதன் போராளிகள் நகரக்கூடிய புவியியல் எல்லைகள் குறுகியதாக உள்ளன. மேலும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இலத்திரனியல் கண்காணிப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலிய படைகளுடன் ஒரு பெரிய மோதலுக்கு தயாராகும் வாய்ப்பு இப்போது ஹமாஸுக்கு இல்லை.
இருந்தபோதிலும், ஒரு அமைப்பாக, காசாவுக்கு வெளியே உள்ள தலைவர்களுடனும், மேற்குக் கரை உட்பட ஏனைய பகுதிகள் முழுவதும் உள்ள ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடும், ஹமாஸ் நீண்ட காலத்துக்கு இஸ்ரேலிய படைகளுக்குத் தொல்லைகளைக் கொடுக்க முடியும்.
இஸ்ரேல் காசா முழுவதையும் மீண்டும் ஆக்கிரமித்து, ஹமாஸின் செயற்பாடுகளுக்குக் காரணமாக இருந்த எஞ்சியுள்ள சுரங்கங்களை அழிக்காத வரைக்கும் அதன் நிலை ஆபத்தானதே. பலஸ்தீன மாநிலத்தை அங்கீகரிக்கும் ஒரு சமாதான ஒப்பந்தத்தின் பின்னணியில், இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான விருப்பத்தை ஹமாஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு அரசியல் ஒப்பந்தம் மட்டுமே இதற்கான முன்னேற்றப் பாதையாக அமையலாம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசைத் தவிர, அனைத்து அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளும் பலஸ்தீன மக்களை முழுமையாகக் கைவிட்டு விட்டன. அரபுலக நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன அல்லது பலஸ்தீன விடயத்தில் வெறுமனே கண்மூடித்தனமாக உள்ளன.
காசாவின் நிலைமை எப்படி முடிவடையும் என்பது தற்போது இடம்பெற்று வரும் ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணிக்கும் இடையிலான போரின் முடிவுகளையே பெரும்பாலும் சார்ந்திருக்கும். தெஹ்ரானும் அதன் நட்பு நாடுகளும் வெற்றி பெற்றால், ஒரு தீவிரமான தீர்வுக்கான நிலை உருவாகலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

Ralihan Sathath is an educator, Tamil language and literature specialist, and Editorial Contributor at KVC Media. View author profile

