இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, திங்கட்கிழமை இரவு (02) மருதானை தொழில்நுட்பச் சந்திக்கு (Technical Junction) அருகிலுள்ள கட்டடமொன்றில் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் சீனப் பிரஜைகள்
கைது செய்யப்பட்ட 21 வெளிநாட்டவர்களில் 12 பேர் சீனப் பிரஜைகள் ஆவர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
மேலும், ஆறு பங்களாதேஷ் பிரஜைகளும் மூன்று இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்கள் மற்றும் சரிபார்ப்பு: இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

