அக்குறணை வெள்ளப்பெருக்குக்கு விஞ்ஞானபூர்வமான நிலையான தீர்வு அவசியம் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலையான மற்றும் விஞ்ஞானபூர்வமான தீர்வை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (20) பாராளுமன்றத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அக்குறணை வெள்ளப்பெருக்கு: தொடரும் பாதிப்புகள்

சில நாட்களுக்கு முன்னர் அக்குறணை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாகப் பாராளுமன்றத்திலும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் பலமுறை கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் லால் காந்த மற்றும் அப்போதைய ஆளுநர் சரத் அபேகோன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைந்துள்ளனவா என்ற கேள்வி தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிங்கா ஓயா மற்றும் அதன் கிளை நீரோடைகளின் கரைகளைப் பலப்படுத்துதல், நீர் தேங்கும் பள்ளமான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், கனமழை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆற்றுப் பாதுகாப்பு வலயங்களையும் நீரோட்டப் பாதைகளையும் பாதுகாக்க வேண்டும்

பிங்கா ஓயா பகுதியில் நீர்வழிப் பாதையின் அகலத்தை 40 அடியாக நிர்ணயிப்பது போதுமானதல்ல எனக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், குறைந்தபட்சம் 60 அடி அகலம் தேவைப்படுவதாக வலியுறுத்தினார். அதேபோன்று, சிறிய ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பாதுகாப்பு வலயங்களையும் உரிய முறையில் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆற்றங்கரைகளை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு வலயங்களைப் பொருட்படுத்தாமல் முறையற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த விடயத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், முறையற்ற கட்டுமானங்களை அகற்றுவதாக ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டிருந்தபோதிலும், உரிய நடவடிக்கைகள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகத் தாம் பெற்ற தகவலின்படி, 600க்கும் அதிகமான முறையற்ற கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை இரண்டு வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெள்ள அபாயத்தைக் கையாள விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை தேவை

அக்குறணையைச் சேர்ந்த அமெரிக்கப் பல்கலைக்கழகப் பட்டதாரியான தனியார் பொறியியலாளர் ஒருவர் கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக மழைவீழ்ச்சித் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தகவல்களை வழங்கி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், இவ்விடயத்தில் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் பின்னடைவு காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையை ஒரு அரசாங்கத்தின் தவறாக மட்டும் பார்க்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கமும் ஆட்சிக்கு வரும்போது இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தமது பொறுப்புகளை உரிய நேரத்தில் முறையாக நிறைவேற்றுகின்றார்களா என்பது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.

நிபுணர்களின் அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

தொடர்ச்சியாக அமைக்கப்படும் கொங்கிறீட் தளங்கள், தடுப்புச் சுவர்கள் மற்றும் முறையற்ற கட்டுமானங்கள் நீர் வழிந்தோடும் பாதைகளுக்குத் தடையாக மாறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எனவே, ஆற்றங்கரையோரப் பாதுகாப்பு வலயங்களை உறுதிப்படுத்துவதுடன், நீரோட்டத்திற்குத் தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாகவும் உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் நந்தலால் மற்றும் பொறியியலாளர் நிலூகா உள்ளிட்ட நிபுணர்கள் இந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை முன்னெடுப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெள்ளப்பெருக்கு முகாமைத்துவம் தொடர்பான நிபுணத்துவத்தைக் கொண்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும் (SLRDC) இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து, மீண்டும் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் எனக் கோரினார்.

வீதி விபத்துகளையும் வெள்ள அபாயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அக்குறணைப் பகுதியில் ஏழாவது மற்றும் எட்டாவது மைல் கற்களுக்கு அருகிலுள்ள குருகொட சந்திப் பகுதியில் அண்மையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது மண்சரிவு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படும் பகுதிகளையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனியான நிதி ஒதுக்கீட்டுடன் விசேட செயலணி அமைக்கக் கோரிக்கை

அனர்த்த முகாமைத்துவ நிலையம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒன்றிணைத்து, அக்குறணை வெள்ளப்பெருக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான விசேட செயலணியொன்றை அமைக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஜனாதிபதியின் கீழான அரசாங்கம் இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கெனத் தனியான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு, அக்குறணை மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்தி மூலம்: விருட்ச வேந்தன்

Abdul Razak Muzammil
Abdul Razak Muzammilhttps://kvcmedia.lk
Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles