இலங்கையின் மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள சம்பூர்–கப்பல்துறை மின்சாரப் பரிமாற்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, Ceylex Engineering (Pvt) Ltd மற்றும் Xingneng Electric Power Construction Co. Ltd ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சிக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக வரிகள் தவிர்த்து 4.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 0.78 மில்லியன் யூரோக்கள் மற்றும் 1,096.08 மில்லியன் இலங்கை ரூபா செலவிடப்படவுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் கீழ், சம்பூரில் 220(132)/33 கிலோவோல்ட் சூரிய மின் உற்பத்தி வலையமைப்புக்கான மின் துணைநிலையம் அமைக்கப்படுவதுடன், கப்பல்துறையில் அமைந்துள்ள 220(132)/33 கிலோவோல்ட் மின் துணைநிலையமும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
நாட்டின் மின்சாரப் பரிமாற்ற உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தேசிய மின்சாரக் கட்டமைப்பின் உகந்த செயற்பாட்டுத் திறனைப் பேணுவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தத் திட்டத்திற்கு 2025 டிசம்பர் 15ஆம் திகதி அமைச்சரவை ஏற்கனவே கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரரைத் தெரிவுசெய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டன. இதன்போது ஆறு விலைமனுக்கள் கிடைத்துள்ளன.
அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், குறைந்த விலையில் தொழில்நுட்ப மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த விலைமனுவைச் சமர்ப்பித்த கூட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான எரிசக்தி அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆதாரங்கள் : அமைச்சரவைத் தீர்மானத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட செய்தி.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

