திருகோணமலை, உப்புவெளி கப்பல்துறை பகுதியில் வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி இரவு, கப்பல்துறை சந்தியை நோக்கிப் பயணித்த வாடகை முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரு ஆண்கள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, உப்புவெளி பொலிஸாரும் மாத்தறை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், நவம்பர் 6ஆம் திகதி இரவு திக்குவெல்ல பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஏனைய இரு சந்தேகநபர்களும் நவம்பர் 2ஆம் திகதி 32 கிராம் 800 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்தக் கொலைச் சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் திக்குவெல்ல மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய பின்னர், சட்டபூர்வமாகப் பணியிலிருந்து விலகியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile



