இலங்கையின் எதிர்கால ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யவும், சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பசுமை ஆற்றல் (Green Energy) மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் (Renewable Energy Sector) தகுதியான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கவும் அரசாங்கம் ஒரு முக்கிய மூலோபாய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, புகழ்பெற்ற இலங்கை-ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் (Ceylon German Technical Training Institute – CGTTI) கீழ், ரூ. 398 மில்லியன் (ரூ. 39.8 கோடி) மதிப்பிடப்பட்ட செலவில் புதிய புதுப்பிக்கத்தக்க சக்தி பயிற்சி மையம் ஒன்றை (Renewable Energy Training Centre) அமைப்பதற்கான முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களால் முன்வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நில ஒதுக்கீடு மற்றும் திட்ட அமைவிடம்
இப்புதிய பயிற்சி மையமானது மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான வளவ மண்டலத்தின் மயூரபுர பிரிவில் அமைந்துள்ள 3.11 ஹெக்டேர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இப்பகுதி திட்டமிட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் மிக முக்கியமான மூலோபாயக் காரணம் ஒன்று உள்ளது. அமையவுள்ள மையத்தின் அருகாமையிலேயே:
- கிரிபான்வெவ மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் (Kiribbanwewa Floating Solar Power Plant)
- இலங்கை சுதேசிய சக்தி அதிகார சபையின் (SLSEA) அம்பாந்தோட்டை பயிற்சி மையம்
ஆகியவை அமைந்துள்ளன. இதன் மூலம், இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை தத்துவார்த்தக் கல்வியுடன் (Theoretical Studies) நின்றுவிடாமல், நேரடியாக களத்திற்குச் சென்று நேரடி செய்முறைப் பயிற்சிகளைப் (Practical Exposure) பெற்றுக்கொள்வதற்கான அரிய வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
CGTTI மற்றும் SLSEA இடையிலான கூட்டு ஒப்பந்தம்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப, அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி இலங்கை-ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கும் (CGTTI), இலங்கை சுதேசிய சக்தி அதிகார சபைக்கும் (SLSEA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவும், அதன் முதன்மையான இலக்கை அடையும் வகையிலுமே தற்போதைய ரூ. 398 மில்லியன் ஒதுக்கீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மையம் CGTTI நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைப்புக் கிளையாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி அளிக்கப்படவுள்ள முக்கிய துறைகள்
இலங்கையை உலகளாவிய பசுமை ஆற்றல் மையமாக மாற்றுவதற்கான பரந்த பார்வையின் ஒரு பகுதியாக இந்த மையம் கட்டியெழுப்பப்படுகிறது. இ மையத்தில் பின்வரும் முக்கிய துறைகளில் மேம்பட்ட தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன:
- சூரிய மின் சக்தி தொழில்நுட்பம் (Solar Energy Systems): கூரை மற்றும் மிதக்கும் சூரிய மின்தகடுகளை அமைத்தல், பராமரித்தல் மற்றும் இன்வர்ட்டர் தொழில்நுட்பங்கள்.
- காற்றாலை மின் சக்தி (Wind Energy): காற்றாலை டெர்பைன்களின் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பராமரிப்பு பணிகள்.
- சிறிய அளவிலான நீர்மின் சக்தி (Hydropower Systems): சிறிய நீர்மின் திட்டங்களின் உற்பத்தி சீரமைப்பு மற்றும் பராமரிப்பு.
- பயோமாஸ் சக்தி (Biomass Energy): கழிவுப் பொருட்களிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்.
- மின்சார மற்றும் எந்திரவியல் பொறியியல் (Electrical & Mechanical Engineering): நவீன தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் சர்க்கியூட் அமைப்புகள்.
- எரிசக்தி திறன் மேலாண்மை (Energy Efficiency Management): தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆற்றல் விரையத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பங்கள்.
உள்நாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம்
இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இது முற்றிலும் உள்நாட்டு நிதியைப் (Domestic Funds) பயன்படுத்தி செயல்படுத்தப்படவுள்ளது. சர்வதேசக் கடன்கள் அல்லது வெளிநாட்டு நிதி ஆயங்களை மட்டுமே நம்பியிருக்காமல், உள்நாட்டுப் பொருளாதார வளங்களைக் கொண்டு இத்தகைய தொழிற்கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நாட்டின் சுயாதிபத்தியப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டிலும், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர் சந்தையிலும் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர இந்த சான்றிதழ் பயிற்சிகள் பெரும் பாலமாக அமையும்.
இலங்கையின் பசுமை ஆற்றல் இலக்குகளும் எதிர்காலமும்
இலங்கை அரசாங்கம் 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மூலம் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன் 2050 ஆம் ஆண்டிற்குள் ‘பூஜ்ய கார்பன் உமிழ்வு’ (Net Zero Emission) நிலையை அடைய திட்டமிட்டுள்ளது.
இத்தகைய பிரம்மாண்டமான இலக்குகளை அடைவதற்கு வெறுமனே மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது மட்டும் போதாது. அவற்றை திறம்பட நிர்வகிக்கவும், பராமரிக்கவும் தகுதியான ‘தொழில்நுட்ப மனிதவளம்’ (Skilled Human Resources) மிகவும் அவசியமாகும்.
ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச தரநிலைகளுடன் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய மையம், இலங்கையின் பசுமை ஆற்றல் புரட்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile



